ஆ.... கடவுளே... இன்னும் கொஞ்ச நேரம்
களிச்சு
இந்த பாளாப் போன அலாரம்
அடிக்கக்கூடாதா...
எந்த நாசமாய்ப் போனவன் இதை கண்டுபிடிச்சானோ....
இப்பத்தான்
கண்ண மூடுறன் அதுக்குள்ள டீங்...டீங் எண்டு கத்துது.
காலமை எழுந்தா அதில இருந்து
ஒரே ஓட்டம். மனுசருக்கு கொஞ்சமாவது
நிம்மதி இருக்கா?
நான் எழும்பினால் மட்டும் சரியா? பிள்ளைய
எழுப்போனும். முதல்ல கொஞ்சோனும் பிறகு
கெஞ்சோனும் கடைசியில அப்பாட பெல்ட எடுக்கவோ
எண்டு அதட்டோனும். அதக்குப் பிறகு அவன வெளிக்கிடித்திப்போட்டு
என்ர மனுசன எழுப்போனும்.
பிள்ளை
எண்டாலும் பறவாயில்லை கத்தினால் எழும்புவான்
ஆனா இந்த மனுசன் இரவில
என்ன இழவ குடிக்குதோ தெரியேல்ல
இழுத்து
இழுத்து போத்திக்கொண்டு படுக்குது.
எண்டாலும்
அதையும் எழுப்பி வேலைக்கு அனுப்பிப்
போட்டு
எங்களோடய
வந்து ஒட்டிக்கொண்டிருக்கும் அவர்ட அப்பாவுக்கும் தேத்தண்ணி
போட்டு குடுத்து சாப்பாடும் எடுத்து வச்சுட்டு
கடைசியில
நானும் அவசர அவசரமாய் வேலைக்குப்
போயிட்டு வந்து, வீட்டு வேலையையும்
பாத்திட்டு மனுசனுக்கும் நோகாமல் நடந்து பிள்ளைக்கும்
ஹோம் வெர்க் சொல்லிக் குடுத்து
இரவுக்கு சாப்பாடும் செஞ்சு எல்லாருக்கும் குடுத்துப்போட்டு....
சிவனே எண்டு படுத்தா கறகற
கீச் கறகறகீச் என்டு கேக்குது.
எழும்பி
வந்து பாத்தா என்ர மாமனார்,
அதாவது என்ர மனுசன்ட அப்பா
என்ர மனுசன்ர சப்பாத்துக்கு பொலிஷ்
போட்டுக்கொண்டிருக்காரு.
என்ன மாமா இந்த நேரத்தில
இதெல்லாம்
எண்டு எரிச்சலோட கோட்டால்
பிள்ள இதெல்லாம் நான் இப்ப தானோ
செய்யிறன் அவன் நர்சரி போற
காலத்தில இருந்து நான் தானே
அவனுக்கு இதெல்லாம் செய்யிறன் எண்டு சொல்லீட்டு போகேக்கில
வேதம் புதிதுல சத்தியராயுக்கு விழுந்த
போல எனக்கும் ஒரு அறை விழுந்திச்சு.
என்ன இருந்தாலும், அவனே வளர்தாலும், அப்பாவுக்கு
எப்பவுமே மகன், மகன் தானே.....