Friday, 21 October 2011
பிடித்த கடவுள் ( நகைச்சுவை கவிதை)
பிடித்த கடவுள் - நீ
பித்துப் பிடித்த கடவுள்
எல்லாம் அறிந்தவன் நீ ஆண்டவன் நீ
கடவுள் நீ முற்றும் கடந்தவன் நீயென்று
கல்லென்றும் பாராது நாடிவந்து – உன்
முன்விழுந்து வேண்டிநின்றேன்
காப்பாய் எனை நீ என்று
வைத்தாயே தொடர்ந்து எனக்கு
ஆப்பு ஆப்பாய்
சொல்லெணாத் துன்பங்கள் வந்து
சூழ்ந்து என்னை ஆர்ப்பரிப்பினும்
எல்லாம் வல்லவன் என்னோடு இருப்பான் என
வைத்தேனே உன்னில் நம்பிக்கையை
விரித்துவிட்டாயே நீயோ உன் கையை
வெற்று வேதங்களைக் கற்று கடைசிவரை
பற்றினேன் கடவுளென்று உன்னை
கை கால்களில் கட்டோடு – வைத்தியரின்
கட்டிலே கதியென்று கிடக்கின்றேன் இப்போது
நெற்றியிலே இட்டநீறு கொட்டுமுன்னே அவர்கள்
சுற்றிவந்து சூழ்ந்து நின்று அடிக்கையிலே
எட்டி நின்று நீயும் வேடிக்கை பார்த்தனையோ
நீயே பரம்பொருள் மெய்யே சிவமென்று
வாயே ஓயாமல் உரைத்த என்னை
வானம் அள்ளித் தெளித்த மழையினிலே
துள்ளி முளைத்த காளானெல்லாம்
எள்ளிநகை ஆடும் வகை செய்தனையே
அன்பே சிவமென்று நீயுரைத்த
மறைதனை நீயே மறந்தனையோ
அதை நானும் நம்பித்தானே அடுத்தவீட்டுக்
கன்னியின் மேல் காட்டினேன் அன்பை
இப்படி அவள் குடும்பமே வந்து
மொத்திவிட்டுப் போனதே என்னை
உட்காயங்கள் உயிர்வரை வலிக்க
விட்டாயே என்னைத் தனிமையிலே புலம்ப
எனக்குப் பிடித்த கடவுளா நீ
பித்துப் பிடித்த கடவுளா நீ
Labels:
கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
சதீஸ்,
உங்க பின்னூட்டம் பார்த்துட்டு வந்தால் இங்கே கடவுள் சிரிக்கிறார். நல்ல நகைச்சுவை உணர்வு.நான் ஒரு காலத்தில கவிஞர் காத்துவராயனா கொலை வெறீல அலைஞ்சேன்!
//அன்பே சிவமென்று நீயுரைத்த
மறைதனை நீயே மறந்தனையோ
அதை நானும் நம்பித்தானே அடுத்தவீட்டுக்
கன்னியின் மேல் காட்டினேன் அன்பை
இப்படி அவள் குடும்பமே வந்து
மொத்திவிட்டுப் போனதே//
அந்த பக்கத்து வீட்டு கன்னி பேரு சிவகாமியா? சிவனுக்கே ஆப்பு வைக்கிறாப்போல சிவகாமிக்கு அன்ப்பு காட்டினா மொத்த தான் செய்வார் லார்ட் ஷிவா!
கண்காணா கடவுளை நம்பி ஏமாந்தோர் வரிசையில் நீங்களுமே. அது என்ன கன்னிகளின் மேலேதான் அன்பு அளவுகடந்து பாய்கிறது. அதுதானோ ஆப்பு வைக்கப்பட்டது.
Post a Comment