Thursday, 29 December 2011

மழை




ஒவ்வொரு துளியும்
மேகம்
எனக்கு அனுப்பிய
SMS.

Tuesday, 22 November 2011

மச்சாளை விடு தூதாய்!!!!



ஹாய் மச்சாள் ஹாய் மச்சாள்
எப்படி சுகம்
வீட்டிலயும் அம்மா அப்பா 
எப்படி சுகம்
            அக்கா எங்கே ரெண்டு நாளாய் காணலியே
            வெள்ளிக் கிழமை கோயிலுக்கும் வரவில்லையே
            அவளை நான் காணத நாட்களிலே
            அரைவாசியாய் தேய்ந்து போறேன் நிலாப் போலே
            எங்கே அவள் என்னவள்
            நீ சொல்லிப் போவாயா......
                           (ஹாய் மச்சாள் ஹாய் மச்சாள்.....

அக்காவிடம் சொல்லிவை
அத்தான் ரொம்ப நல்லம் என்று – அவள்
அடிக்கடி என்னை முறைக்கிறாள்
அது வேண்டாம் என்று
கடிதம் கடிதமாய் எழுதினேன் - தூங்காமலே
அதை கிழித்துப்போட்டு எறிகிறாள் படிக்காமலே
நாயென்று ஒருநாள் என்னைப் பேசிவிட்டாள்
அது கூடப் பறவாயில்லை பொறுத்துக்கொண்டேன்
அப்பாவிடம் சொல்வேன் என்று மிரட்டிவிட்டாள்
அது கேட்ட நாள் முதலாய் தூக்கமில்லை
உனக்குமா என்னைப் பார்க்க பாவமாயில்லை
ஹெல்ப் பண்ணு உன்னை விட்டால் யாருமேயில்லை
                    (ஹாய் மச்சாள் ஹாய் மச்சாள்......
 
அவளேட ஸ்கூல்பாக்கின் நுனியில் ஒன்றை
நோகாமல் பிடுங்கி நான் வைத்திருக்கேன்
மை முடிந்து அவளெறிந்த பேனா ஒன்றை
ஆசையோடு எடுத்து நான் வைத்திருக்கேன்
அவளைத் தவிர வேறொருத்தியை நினைத்ததில்லை
அவள் என்னவென்றால் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை
கவிதை எல்லாம் அவளைப் பற்றி எழுதித் தந்தேன்
கண்டபடி எனைப்பிடித்துப் பேசிவிட்டாள்
சீதனமாய் ஒரு சதமும் வாங்க மாட்டேன்
கல்யாணச் செலவைக்கூட நானே தான் பார்த்துக்கொள்வேன்
அவள் இல்லாமல் நானினிமேல் வாழமாட்டேன்
எங்களை சேர்த்துவை உன்னை நான் மறக்கமாட்டேன்
                          (ஹாய் மச்சாள் ஹாய் மச்சாள்......



ஹா...ஹா...ஹா,
எப்புடீ?

Sunday, 13 November 2011

இனிக்கும் வாழ்க்கை உனக்கே உனக்கே




முயற்சி உடை மனிதா
முயன்று தடையை உடை
எழிச்சி நடை நடந்தே
உலகை புகழ்ச்சி பாடவை

வாழ்வினை  வென்றவரே வாழ்ந்தார் – வரலாற்றில்
மாண்டபின்பும் அவர் வாழ்வார்
வெற்றியினை முயன்று எட்டிவிடு – வரலாறே
போற்றும் உன்னை மண்டியிட்டு

திட்டமிட்டுத் தொடங்க வேண்டும் - வெற்றி
கிட்டும்வரை உழைக்க வேண்டும்
முயன்றால் எதிலும் தோல்வியில்லை - முதலில்
தோற்பினும் பிறகு வெற்றி தூரமில்லை

சாதகமான சந்தர்ப்பங்கள் எதுவும்
வாய்ப்பதில்லை தானாய் முன்னேற
வாய்ப்பதனை உனக்கு வாய்ப்பாய்
ஆக்கினால் எதுவும் சாத்தியமே

இலகுவில் கிடைப்பது நிஐமல்ல – யாரையும்
ஏமாற்றிப் பெறுவது நிரந்தரமல்ல
நேர்மைவழி நின்று ஊக்கமாய் முயன்றால்
இனிக்கும் வாழ்க்கை உனக்கே உனக்கே

Tuesday, 1 November 2011

அந்த இரவு தந்த பயம்




பாதி இருளில் ஆரண்யம்
மதிமயங்க வைத்தததன் லாவண்யம்
கத்தும் குருவிகளில் எனை மறந்து
நறுமலர்கள் தனை நுகர்ந்து
நெடுந்தூரம் சென்றேன்  வழி மறந்து

தூரத்து சங்கீதமென் வேகத்தைக் கூட்ட
விர்றென்று  தேடி இடம் மாறி - நான்
விரைந்த  இடம் ஒரு காடா?
இல்லை இல்லை அதுவொரு சுடுகாடு

தேகச்சூடு தணிந்து குளிர் வீசியது
நரம்புகள் விறைத்து முடிகள் சிலிர்த்தன
சுட்ட பிணங்களின் அணையாத் தணல்களின்
நெருப்பும் புகையும் கண்களைத் துருத்தின

முழுக்க எரிந்து முடியாத ஒன்றை
நாயோ நரியோ ஏதோ ஒன்று
இழுத்துக் கொண்டு எனைக்கண்டு ஓடியது
விறைத்து நெஞ்சு துடிக்கத் திரும்பி ஓடினேன்

எடுத்த தாகம் தணிக்கத் தண்ணீர்
கிடைக்க இடையில் கிணறு ஒன்று
கிட்டினேன் எட்டிப் பார்த்தேன்
மண்டியிட்டு உருவமொன்று அழுதுகொண்டிருந்தது

ஓடிப்போய்த் துலைவோம் என்றில்லாமல் அதன்
தோளைத் தொட்டு மெல்லத் திருப்பினேன்
ஓலத்தை நிறுத்தி மெல்லமுகம் நிமிர்த்தி முறைத்தது
ஆவென்று கத்தியும் வாய் எனக்குத் திறக்கவில்லை

கோரப்பற்களில் சொட்டும்குருதி துளித் துளியாய்
கொடும்நெருப்பில் எரியும் பந்து விழிகளாய்
உரிந்த தோல்களின் ஊடே ஊனும் ஒழுக
புழுக்களும் பூச்சிகளும் ஊர்ந்தன உடம்பில்

இருந்த மாத்திரத்தில் அந்தரத்தில் எழுந்து
விரித்த வாயோடு வந்தது என்னை விழுங்க
திரும்பி எடுத்த ஓட்டம் திரும்பத்திரும்ப ஓடியும்
அடுத்த அடியை எடுத்துவைக்க  முடியல

கிட்டவந்த அதற்கு எட்டியுதைக்கக் கால்நீட்டி
உறுண்டு விழுந்தேன் கட்டிலின் மீதிருந்து
எழுந்து போய்ப் படுத்துக்கொண்டேன்
மீண்டும் போர்வையைப் போர்த்திக்கொண்டு 

Sunday, 30 October 2011

காதலாகி கசிந்து......




               "என் வாழ்க்கையில் இதுவரைக்கும் நான் தோல்விகளையும் வேதனைகளையும் மட்டுமே சந்தித்து வந்திருக்கிறேன். எனக்கு நீ கிடைத்ததை மிகப்பெரிய ஆறுதலாக நினைக்கிறேன். இனிமேல் நீ தான் என் வாழ்க்கையில் எல்லாமே. நீ இல்லாத என்னுடைய எதிர்காலத்தை எண்ணிப்பார்க்கவே பயமாக இருக்கிறது. இப்போது நான் சந்தோஷமாக இருக்கிறேன். உன்னால் கிடைக்கும் இந்த சந்தோஷம் எப்போதுமே நிரந்தரமாக இருக்க வேண்டும்."
      - அரவிந்தன்

        "நான் உங்களுக்காகப் பிறந்தவள். உங்களோடு வாழ்வதில்தான்
என்னுடைய வாழ்கையின் அர்த்தமே இருக்கிறது. இனியும் நீங்கள் கவலைப்பட்டால் நான் வாழ்வதில் பயனில்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது நீங்க மட்டும் தான். உங்களின் நிழலாக எப்போதுமே நான் இருப்பேன். இது சத்தியம்."
      - தர்ஷினி

       "என் வாழ்க்கையில் இதுவரைக்கும் நான் தோல்விகளையும் வேதனைகளையும் மட்டுமே சந்தித்து வந்திருக்கிறேன். எனக்கு நீ கிடைத்ததை மிகப்பெரிய ஆறுதலாக நினைக்கிறேன்.
இனிமேல் நீ தான் என் வாழ்க்கையில் எல்லாமே. நீ இல்லாத என்னுடைய எதிர்காலத்தை எண்ணிப்பார்க்கவே பயமாக இருக்கிறது. இப்போது நான் சந்தோஷமாக இருக்கிறேன். உன்னால் கிடைக்கும் இந்த சந்தோஷம் எப்போதுமே நிரந்தரமாக இருக்க வேண்டும். இதைத்தான் நான் தர்ஷினியிடமும் சொன்னேன். ஆனால் அவள் என்னை ஏமாற்றி விட்டாள். நீயும் என்னை ஏமாற்றி விடாதே."
       - அரவிந்தன்

       "என்னாலும் நீங்க இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்து பார்க்கக்கூட முடியாமல் இருக்கிறது. நானும் நீங்களும் சேர்ந்து வாழ வேண்டும் என்பது இறைவன் இட்ட நியதி. உங்களை எனக்கு தந்த கடவுளுக்குத்தான் நான் நன்றி சொல்லனும்.  எங்களை இனி எந்த சத்தியாலும் பிரிக்க முடியாது. அரவிந்தன், நான் வாழ்ந்தால் அது உங்களேடு தான். இல்லாவிட்டால் சாவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை."
      - மாதவி

       "என் வாழ்க்கையில் இதுவரைக்கும் நான் தோல்விகளையும் வேதனைகளையும் மட்டுமே சந்தித்து வந்திருக்கிறேன். எனக்கு நீ கிடைத்ததை மிகப்பெரிய ஆறுதலாக நினைக்கிறேன். இனிமேல் நீ தான் என் வாழ்க்கையில் எல்லாமே. நீ இல்லாத என்னுடைய எதிர்காலத்தை எண்ணிப்பார்க்கவே பயமாக இருக்கிறது. இப்போது நான் சந்தோஷமாக இருக்கிறேன். உன்னால் கிடைக்கும் இந்த சந்தோஷம் எப்போதுமே நிரந்தரமாக இருக்க வேண்டும். இதைத்தான் நான் தர்ஷினியிடமும் சொன்னேன் மாதவியிடமும் சொன்னேன். ஆனால் அவர்களெல்லாம் என்னை ஏமாற்றி விட்டார்கள். நீயும் என்னை ஏமாற்றினால் என் நிலமை என்னவாகும் என்று எனக்கே தெரியாது.'
      - அரவிந்தன்

      "அவர்கள் கொடுத்து வச்சது அவ்வளவு தான். அரவிந், உம்மை பற்றி நல்லாப் புரிஞ்சு கொண்ட பிறகு தான் நான் உம்மை லவ் பண்ண தொடங்கினான். உம்முடைய நல்ல மனசு எனக்கு பிடிச்சிருக்கு. எல்லோருக்குமே கடந்த காலம் கறைபடிஞ்சதாய் தான் இருக்கும்.
இனியும் நீர் உமது இறந்த காலத்தைப் பற்றி கவலைப் படக்கூடாது. நீர் எனக்காக நான் உமக்காக."  
       - ரஞ்சனி

       "என் வாழ்க்கையில் இதுவரைக்கும் நான் தோல்விகளையும் வேதனைகளையும் மட்டுமே சந்தித்து வந்திருக்கிறேன். எனக்கு நீ கிடைத்ததை மிகப்பெரிய ஆறுதலாக நினைக்கிறேன். இனிமேல் நீ தான் என் வாழ்க்கையில் எல்லாமே. நீ இல்லாத என்னுடைய எதிர்காலத்தை எண்ணிப்பார்க்கவே பயமாக இருக்கிறது. இப்போது நான் சந்தோஷமாக இருக்கிறேன். உன்னால் கிடைக்கும் இந்த சந்தோஷம் எப்போதுமே நிரந்தரமாக இருக்க வேண்டும். இதைத்தான் நான் தர்ஷினியிடமும் சொன்னேன் மாதவியிடமும் சொன்னேன் ரஞ்சனியிடமும் சொன்னேன். ஆனால் அவர்களெல்லாம் என்னை ஏமாற்றி விட்டார்கள். நீயும் என்னை ஏமாற்றிவிடாதே."
       - அரவிந்தன்

       "நல்ல பெடியன். ஒழுங்காத் தான் இருந்தவன். இப்ப கொஞ்ச நாளாய்தான் இப்படி. யாரைப் பார்த்தாலும் இதையே செல்லிக் கொண்டு திரியிறான். ம்... எல்லாம் அவரவர் தலையெழுத்து."
      -  ஒரு வழிப்போக்கர்

Tuesday, 25 October 2011

பேசியது நிலவு....



வாடா வா
காத்திருந்தேன் கன காலமாய்
மாட்டிக் கொண்டாய் இன்று
மிக வசமாய்

வளர்வதும் தேய்வதும் நானல்ல
அறியாயோ என் வரலாறு
பூமி அன்னை சுற்றுகிறாள்
அதனால் தான் இந்த கோளாறு




பள்ளங்களும் நிறைய திட்டுக்களும் என்னில்
அதற்காக
மாதர் முகத்திற்கு ஈடுநான் இல்லையென
திட்டுவாயோ என்னை?

கோடிகளை கொட்டி
வல்லரசுகளும் என்னை ஆராய
கேடுகெட்ட உனக்காய்
நான் போகவோ தூதாக

பள்ளி செல்லும் வயதிலே
நிலா நிலா வாவென்று அழைத்தாய்
பிள்ளைப் பருவமது வேறென்ன சொல்ல
இன்று
வளர்ந்து நீ அப்படி என்ன கிழித்தாய்
எவளுக்கோ நான் போய்
உன்னிலையைத் தூது சொல்ல

பரீட்சையிலே என்னைப்பற்றி
கட்டுரை வரையக் கேட்டபோது
அடுத்தவன் மேசையை
எட்டி எட்டி பார்த்தாய்
யார் தந்த தைரியத்தில் இன்று
கண்டவளின் முகத்திற்கும்
என்னை ஒப்பிட்டு எழுதினாய்





நீ அடம் பிடிக்கப் பிடிக்க
என்னைக் காட்டிக் காட்டி
உன்னை ஊட்டி வளர்த்தவள்
உன் அன்னை
உனக்கு என்னவென்றால்
என்னைப் பார்க்கப் பார்க்க
உன் காதலி தான்
நினைவுக்கு வாறாளோ?

என் வழியில் நான் சுற்றுகிறேன்
என்னைத் தொந்தரவு செய்யாதே
நாசமாய்ப் போவதென்றால்
நீ மட்டும் போய்விடு
பேசாமல் என்னை
நிம்மதியாய் விட்டு விடு.

Friday, 21 October 2011

பிடித்த கடவுள் ( நகைச்சுவை கவிதை)




பிடித்த கடவுள் - நீ
பித்துப் பிடித்த கடவுள்

எல்லாம் அறிந்தவன் நீ ஆண்டவன் நீ
கடவுள் நீ முற்றும் கடந்தவன் நீயென்று 
கல்லென்றும் பாராது நாடிவந்து – உன்
முன்விழுந்து வேண்டிநின்றேன்
காப்பாய்  எனை நீ என்று 
வைத்தாயே தொடர்ந்து எனக்கு
ஆப்பு ஆப்பாய்

சொல்லெணாத் துன்பங்கள் வந்து
சூழ்ந்து என்னை ஆர்ப்பரிப்பினும்
எல்லாம் வல்லவன் என்னோடு இருப்பான் என
வைத்தேனே உன்னில் நம்பிக்கையை
விரித்துவிட்டாயே நீயோ உன் கையை

வெற்று வேதங்களைக் கற்று கடைசிவரை
பற்றினேன் கடவுளென்று உன்னை
கை கால்களில் கட்டோடு – வைத்தியரின்
கட்டிலே கதியென்று கிடக்கின்றேன் இப்போது
நெற்றியிலே இட்டநீறு கொட்டுமுன்னே அவர்கள்
சுற்றிவந்து சூழ்ந்து நின்று அடிக்கையிலே
எட்டி நின்று நீயும் வேடிக்கை பார்த்தனையோ

நீயே பரம்பொருள் மெய்யே சிவமென்று
வாயே ஓயாமல் உரைத்த என்னை
வானம் அள்ளித் தெளித்த மழையினிலே
துள்ளி முளைத்த காளானெல்லாம்
எள்ளிநகை ஆடும் வகை செய்தனையே

அன்பே சிவமென்று நீயுரைத்த
மறைதனை நீயே மறந்தனையோ
அதை நானும் நம்பித்தானே அடுத்தவீட்டுக்
கன்னியின் மேல் காட்டினேன் அன்பை
இப்படி அவள் குடும்பமே வந்து
மொத்திவிட்டுப் போனதே என்னை
உட்காயங்கள் உயிர்வரை வலிக்க
விட்டாயே என்னைத் தனிமையிலே புலம்ப
எனக்குப் பிடித்த கடவுளா நீ
பித்துப் பிடித்த கடவுளா நீ

Tuesday, 18 October 2011

பேதை மதியும் மூடமதியும்



பல கட்டுக்கதைகளை கேட்டு கேட்டு
கெட்டது புத்தி காலங் காலமாய் - அதிலுமிந்த
நிலவு படுது கதைகளிலே படாத பாடு

வேடம் பூண்டு அமுதை உண்ட
ராகு கேதுவை காட்டிக் கொடுத்ததால்
விழுங்குது அவைகள் நிலவை
பாம்பாக வந்தென்று
சந்திர கிரகணம் வந்தபோது
காரணம் அன்று சொல்லப்பட்டது

ஆடிய பிள்ளையாரை
வேடிக்கை பார்த்து நகைத்ததால்
தேயுது நிலவு சாபங்கொண்டு
ஓடிய நிலவு பரமனை வேண்ட
பிறையாய் எடுத்தார்
சிரசில் வைத்தார் என்று
படித்தேன் பாடத்தில் - மனம்
பரிதாபப் பட்டது
நிலவுக்காய் அன்று

மூன்றாம் பிறையே சிவனின்
தலையிலே இருப்பது என எண்ணி
தேடித் தேடிப் பார்த்தேன் அதனை

அடுத்தவர் பிறையை வணங்கையிலே
அது இருக்கும் முடிக்குக் கீழ்த்தானே
ஈசன் முகமது  இருக்குதென நம்பி
சற்று கீழாக உற்று உற்று நோக்கினேன்

அறியாமல் என்றேனும்
நாலாம்பிறை பார்த்து விட்டால்
நாய்படாத பாட்டை
நானே தனியாய்ப் படுவதோ என்று
கூடவந்த நண்பர்களையும்
பார்க்கவைத்து திருப்தி கொண்டதுண்டு

பசியாய் இருக்கும் சமயங்களில்
பார்க்கும் நிலவில் அழகாய்
பாட்டி வடை சுட்டால்
நாக்கில் ஊறும் எச்சில்

பாட்டியும் வடையும் அல்லவது
பள்ளமும் மேடுமே என்று
அறிவதற்கே ஆயின பலகாலம்
விஞ்ஞானிகளாயும் ஆராச்சியாளர்களாயும்
பிறகெங்கே ஆவது நாங்கள்

அட்டமி நவமி தொட்டது நாசமென்றதால்
தள்ளிப் போயின பல காரியங்கள்
நல்ல நாள் பார்த்துப் பார்த்தே


அமெரிக்கன் காரன் அங்கே தன் கொடி நாட்டி
நிலவினை தான் உரிமை கொண்டாட
நாமோ அம்புலிக்கு மாமா முறை சொல்லி
உறவு கொண்டாடினோம்

அவனவன் விண்வெளிக்கு
ஓடம் விட்டுத் தேடிப்போய்
ஆராச்சி செய்து வர
நாங்கள்
நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடி வாவென
நோகாமல் கூப்பிட்டு நிலா தானாக வருமென
இருந்து விட்டோம் சிந்திக்காமல்

உள்ளதை உள்ளபடியே
உண்மையினை உண்மையாகவே
சின்ன வயதிலிருந்தே விதைத்திருந்தால்
வீணான கற்பனைகள் சேராது இருந்திருக்கும்
தெளிவான சிந்தனைகள் சிறப்பினை சேர்த்திருக்கும்

Saturday, 15 October 2011

சிந்தித்தால் சிரிப்புவரும்

ஒன்று ஒன்று என்று ஏங்கும் - மனம்
ஒன்றுமே இல்லாத போது

இன்னும் ஒன்று கிடைத்தால்
நல்லதென  ஏங்கும்
அந்த ஒன்று கிடைத்த போது

நடக்கும் போது ஓட நினைக்கும்
ஓடும் போது பறக்கத் துடிக்கும்
அடுத்தது அடுத்தது என்றே திரிந்து
இருப்பதைத் தொலைத்து நிற்கும்

கொண்டதில் கொள்வதில்லை திருப்தி – எதுவும்
நன்மைக்கே என்று அடைவதில்லை நிம்மதி

இழந்த அமைதி தொடர்ந்து வர
அலையும் மனது கடைசிவரை
கனவுகளில் மிதந்து

போதும் என்ற மனது பாரிலில்லை
பொருந்தாத ஆசைகளுக்கோ குறைவில்லை
நன்மைக்கும் தீமைக்கும் பேதைமைகள் புரிவதில்லை
ஏக்கத்தில் தவிப்பது இதற்கொன்றும் புதிதில்லை

புத்தி உணர்ந்து தெளிந்தாலும்
பித்துப் பிடித்தலையும் பிடிவாதமாய்
விந்தையான மனது இதனை
சிந்தித்தால் சிரிப்பு வரும்

சும்மா சும்மா (லண்டன் தமிழ் வானெலிக்காக எழுதிய முதல் கவிதை)


     
ஆகிவிட்டன ஆண்டுகள் பதினான்கு - ஆயினும்
நான் இருக்கிறேன் உன் நினைவோடு

மழிக்க மழிக்க மீண்டும் முளைக்கும் தாடிபோல்
மறக்க மறக்க உன்னை நினைத்துக் கொண்டிருக்கிறேன்

சூனியமாகிப் போன என் நினைவுகளில் - நீ
உதிர்த்துவிட்டுப் போன புன்னகை மட்டும்
உறவாடிக் கொண்டிருக்கின்றது

விடியாத என் பொழுதுகளோ, கனவுகளில்
உன்னோடு உரையாடிக் கொண்டிருக்கின்றன.

திருந்தாத என் மனமோ
உனக்காக மட்டும் ஏங்கிக் கொண்டிருக்கின்றது

உருப்படாத என் கைகளோ
உன்னைப்பற்றித் தினமும் எழுதிக் கொண்டிருக்கின்றது

உனக்கு மறந்திருக்கும்,
உன்னோடு நான் இருந்த பொழுதொன்றில்
விளையாட்டாய்க் கேட்டாய் - உன்னை
மறந்து நான் போனால் என் செய்வாய் என்று

வாடிய என் முகம் பார்த்து
குறும்பாகக் கண்சிமிட்டிக் கொண்டே
ச்சும்மா சும்மா என்றாய்
உனக்குத் தெரியுமா, இந்த உலகிலே
நானே இன்று
சும்மா சும்மா தான் என்று


லண்டன் தமிழ் வானொலியை நேரலையில் பார்க்கவும் கேட்கவும்
          
     

Saturday, 8 October 2011

அழகே அழகே



ஒட்டுமொத்த உயிரும் ஆடிப்போக
வெட்டிவிட்டுப் போனது மின்னலென
மொட்டுவிட்டதொரு நந்தவனம்
எட்டநின்று பார்த்தபோதே குரங்கென
குட்டிக் கரணம் போட்டது மனம்

நிலவை வென்ற முகமழகு
பிறையை ஒத்த நுதலழகு
புருவம் காட்டும் வில்லழகு – அந்த
விழிகள் வீசிய வேலும் அழகு

செக்கச் சிவந்த ஆப்பில் போலும் கன்னம்
செவ்வாயில் கொவ்வை போலும் வண்ணம்
சுடாமலே வெண்மை கொண்ட சங்காம்
சுட்டுவிழிக்காரி அவள் கழுத்து

எறிக்கும் நிலவில் ஒருதுளி எடுத்து
செதுக்கிய தேகம் சிற்பமோ
உயிரைப்பறிக்கும் மெல்லிடை தன்னில்
உரசும் பின்னல் சர்ப்பமோ

அந்திவானில் கூடப் பார்த்ததில்லை
இந்த மேனி நிறத்தை – முந்தி வந்த
கனவுகளில் வந்து போன தேவதைகள்
மிச்சம்விட்ட குறையெல்லாம் மொத்தமென கண்டேன்
அழகே அழகே அது இவளே இவளென்று

Tuesday, 4 October 2011

வர்ணம் ஆயிரம்




மொட்டுக்குள் ஒளிந்திருக்கும் பூவின் வர்ணம்
பாட்டுக்குள் இழைந்திருக்கும் வார்த்தை வர்ணம்
கட்டுக்குள் அகப்படாத கற்பனை வர்ணம்
ஏட்டுக்குள் எழுத்திற்குள் எத்தனை வர்ணம்
வர்ணம் ஆயிரம்

இப்படி வர்ணம் ஆயிரம்

அன்னையின் வார்ப்பிலே மழலையின் வர்ணம்
அவள்தரும் அன்பிலே சேர்திடும் வர்ணம்
கன்னியின் எண்ணத்தில் எத்தனை வர்ணம்
கடைவிழிப் பார்வையில் தோற்றிடும் வர்ணம்
வர்ணம் ஆயிரம்

இப்படி வர்ணம் ஆயிரம்

மனிதரின் பார்வையில் பிரிந்திடும் வர்ணம்
மரணமும் நேர்கையில் தெரிந்திடும் வர்ணம்
கண்ணுக்குப் புலப்படாத மாந்தரின் வர்ணம்
விண்ணுக்கும் மண்ணுக்கும் இடைப்பட்ட வர்ணம்
வர்ணம் ஆயிரம்

இப்படி வர்ணம் ஆயிரம்

நிறம் எழுத்து குணம் புகழ்
இவை எல்லாம் வர்ணத்தின் அர்த்தங்கள்
ஐம்புலன் உணரும் வர்ணம் ஆயிரம்
ஆயினும் மனமே

வேண்டிடு மனிதம்

Monday, 3 October 2011

வேண்டும் நெற்றியிலே கண்ணொன்று




மனிதக் குப்பைகள் மலிந்த இப்பூமியிலே
நினைத்த மாதிரி வாழ்வெனக்கு அமையவில்லை

பட்டுக்குஞ்தத்திற்கு தவமிருக்கும் விளக்குமாறுகள்
இங்கிருக்கும் எல்லாமே எனக்கு நேர்மாறுகள்

அடுத்தவரின் சுயமரியாதை அவரவரின் சுதந்திரத்தை
கெடுப்பதற்கென்றே திரியுதிங்கே கூட்டங்களாய் - நம்பவைத்துக்
கழுத்தறுத்து நல்லவராய் நடித்து வஞ்சம் தீர்த்து
முதுகில் குத்தும் மூளையற்ற ஜென்மங்கள்

களவெடுக்குதுகள் பொய் பேசுதுகள் - அடுத்தவன்
வளமாய் வாழ்ந்தால் அதுகண்டு வயிரெரியுதுகள்
அமைதியாய் யாரும் இருந்தாலும் அவர்களின்
பிரச்சனையில் மூக்கைவிட்டு குழப்பத்தை உண்டாக்குதுகள்

தற்பெருமைத் தம்பட்டம் அடிக்கின்ற மூடர்கள்
பட்டபின்புகூட திருந்தாத வடிகட்டிய முட்டாள்கள்
வீணாகத் திரிகின்ற இதுபோன்ற வேதாளங்கள்
நீறாகிப் போகட்டும்
சிவனே
நான்திறந்தால்
 
நெற்றியிலே கண்ணொன்று தந்துவிடு – உன்படைப்பில்
தறிகெட்டுப் போனதுகள் அழிந்தொழியட்டும்

Friday, 30 September 2011

சாவதில் இன்பம்





நான் நல்ல மாடு
எனக்குப்போதும் ஒரு சூடு
காதலிச்சுப் பட்டபாடு
வெளியே சொன்னால் வெட்க்கக் கேடு

இதயத்தை விறாண்டி விட்டாள் வார்த்தைகளால்
வடிகிறது ரத்தம் விழிகளில்

அவளுக்கு நான்
ஆரோ ஆகிப் போன நிமிடத்தில்
மூளைக்குள் பல காகங்கள் ஒன்றாகக் கத்தின
மனம் ஊளையிட்டது
உள்ளுக்குள் உண்மை ஓலமிட்டது
நரக வேதனை கிடைத்த போதுதான் தெரிந்து கொண்டேன்
காதலும் ஒரு பாவமென்று

என் கவிதைகளே
என் உதடுகளை காயப்படுத்திய சோகம்
பிளாஸ்டிக் மரத்துக்கு தண்ணி ஊத்தி
வளரும் என்று இருந்த நான் பாவம்

ஆசை உறுட்டி கண்ணில் வைத்து
விரதம் முடிக்க கூவி அழைத்தேன்
அவளோ செவிட்டுக் காகம்

தேவதைக்கு ஒப்பிட்டு
தெரு நாயைக் காதலித்து
வாங்கிய கடியினால் இதயமெல்லாம் ஊசிகள்

நிலவுக்கும் மலருக்கும் அவள் வெகு தூரம்
அதை அறியாமல் எழுதிய நான் ஒரு மூடன்

தாகம் என்று போன எனக்கு
கழுத்தையே அறுத்து விட்டாள்
காதல் என்ற வார்த்தையிலே
கல்லறையைக் கட்டிவிட்டாள்

வீழ்வதில் இன்பம் அருவியில் மட்டுமாம்...
வீழ்வதில் இன்பம் அருவியில் மட்டுமாம்
வைரமுத்து...
சாவதில் இன்பம் காதலில் மட்டுமா?

ம்.... போகட்டும்
காதல் எனது பாவம்
முடிவு எனக்கு பாடம்

Thursday, 29 September 2011

ஆண்டவன் கிறுக்கிய அழகான பொய்








நீ இனி காற்றாக மாறியும் பயனில்லை
காரணம் சுவாசிப்பதற்கு நான் உயிரோடு இல்லை

நான் குயிலானேன் நீ குரல் தரவில்லை
நான் செவிடானேன் நீ கூவுகின்ற வேளை

நான் உன்னை மட்டும் நேசிக்கவில்லை
நீ சுவாசித்த காற்றைக்கூட காதலித்தேன்

அடங்கிய அலையில் நுரைகள் மிச்சம்
தொடங்கிய காதலில் கவிதைகள் மிச்சம்

விலகி நான் வந்தபோதும் விட்டுவிடவில்லை உன் நினைவை
அழகி படம் பார்த்து விட்டு அழுது விட்டேன் இது உண்மை

தீண்டிய நொடியினில் வாடிய செடியான நம் காதல்
ஆண்டவன் கிறுக்கிய அழகான பொய் தானோ?

Sunday, 25 September 2011

காதலால் சுட்ட வடு







எத்தனை நாள் காத்திருந்தாய்
இப்படி என்னைச் செய்துவிட

என்னால் முடியவில்லை
உன்னால் வந்த வேதனையில்
இருந்து இன்னும் மீண்டுவர

உனக்கு வெளிச்சம் வேண்டுமென்றால்
விளக்குத் திரியையெல்லோ எரிக்கவேண்டும்
எவர் உனக்குச் சொன்னார் என்று
என்னையே நீ எரித்துவிட்டாய்


நீயாகச் சொன்னாயே என்னில்
சொர்க்கங்கள் என்று
கூசாமல் தந்தாயே எண்ணி
முத்தங்கள் அன்று


எங்கே உயிர் காதலனாய்
என்னை நீ கண்டாயோ
எப்போது உன் எண்ணங்களை
நானிசை மீட்டியதைக் கேட்டாயோ


ஓரமாக இருந்த என்னை
ஆடச்சொல்லி அழைத்துவிட்டு
மேடையிலே இருந்து என்னை
பாதியிலே தள்ளிவிட்டாய்


அடியே,
காதல் உனக்கு ஒரு பொழுதுபோக்கு
ஆனால் எனக்கோ
என் வாழ்க்கையே போச்சு.

Tuesday, 20 September 2011

ஆசைகள்




ஒன்றல்ல ரெண்டல்ல ஆசைகள்
ஓராயிரம் தாண்டும் சேர்கையில்
இன்றல்ல நேற்றல்ல இதயத்தில்
இது எப்போதும் கேட்கின்ற ஓசைகள்


முடிந்தவரை முடிகின்ற ஆசைகள் - சிலது
கடைசிவரை முடியாத ஆசைகள்
சுமையாகக் கனக்கின்ற ஆசைகள் - நினைத்தாலே
சுகமாக இனிக்கின்ற ஆசைகள்
ஆசைகள் ஆசைகளே - முழுத்
துறவிகளும் துறக்காத ஆசைகளே


பாவம் செய்யாத மனம் - உதவிக்கு
பலனை நாடாத குணம்
பாசம் வைக்கின்ற உறவு - நம்பி
மோசம் போகாத தெளிவு
சமுத்திரம் கொள்ளாத அறிவு - பிறருக்கு
உபத்திரம் செய்யாத கனிவு
நினைத்ததும் ஈடேறுமா ஆசைகள்
விருப்பம் போல் நிறைவேறுமா ஆசைகள்


நலிந்தவர்கெல்லாம் நன்மை வேண்டும்
நாடுகள் தோறும் அமைதி வேண்டும்
வயிற்றுக்கில்லா வறுமை ஒழியவேண்டும்
வருத்தம் நோய் துயரம் அழியவேண்டும்
கற்றவர் தெளிவு எல்லோர்க்கும் வரவேண்டும்
கண்ணோக்கும் திக்கெல்லாம் வசந்தம் வேண்டும்


வேண்டும் வேண்டும் என்கின்ற ஆசைகளே
விளைவு தீமையில் முடிந்தாலே துன்பங்களே
ஆசைகள் ஆசைகளே – உயிரை
வாழ்விக்கும் அசைவுகளே


Sunday, 18 September 2011

காதலிலே தோல்வியுற்றான் (சிறுகதை)

    



  "போச்சுது, எத்தனை ஆசைகள், எத்தனை கனவுகள், எத்தனை கற்பனைகள்.... எல்லாமே போச்சுது.எனக்கு என்ன குறை? ஏன் அவளுக்கு என்னைப் பிடிக்கவில்லை?"
என்று மனதுக்குள்ளே குமுறிக்கொண்டிருந்தான் அவன்.


அவன்;  அவளைப் பார்த்தான்,அவளை நினைத்தான்,அவளைக் காதலித்தான்.

அவளுக்கு அவனைத் தெரியாது.பள்ளிக்கூடம் போகும் போதும் வரும் போதும், சனி ஞாயிறுகளில் ரீயூசன் வாசலிலும் அவனைப் பார்த்திருக்கிறாள்,அவ்வளவுதான்.
ஆறு மாதமாகக் காதலாம் என்று கடிதம் எழுதியிருக்கிறான்.
 "அர்த்தமற்ற செயல்.எனக்கு அவனைப் பற்றித் தெரியாது.அவன் மீது        காதலில்லை.சம்மதம் தா என்றால் எப்படி?"
யோசித்துப் பார்த்தாள். மறுத்து விட்டாள்.


இப்போது அவன் சோகப் பாடல்களை மட்டுமே கேட்கிறான்.அடிக்கடி கன்னத்தை தடவிப் பார்க்கிறான்,தாடி வளர்கிறதா என்று.

அன்று இரவு அவனுக்குப் பிடிக்கவில்லை.அப்படியே நடந்து போனான்.எதிரே சுடுகாடு.மயாணஅமைதி அப்படியே அங்கு இருந்தது.
மனதுக்கும் கொஞ்சம் அமைதி கிடைக்குமா என்று ஓரிடத்தில் அமர்ந்து விட்டான்.

சற்று நேரம் ஆகியிருக்கும்.அந்த வழியால் போன ஒருவர் அவன் அருகே வந்தார்.
"என்ன தம்பி,இந்த நேரத்தில இந்த இடத்தில என்ன செய்கிறீர்?"
அக்கறையோடு கேட்டார்.


மனதை அழுத்தும் சுமையை யாரிடமாவது சொல்லலாம்.கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் அல்லவா.எல்லாவற்றையும் அவரிடம் கூறினான்.

"இந்த வாழ்கையே வெறுத்து விட்டது.பேசாமல் சாகலாம் போல இருக்கு" என்றான்.

"சீச்சீ..... என்ன இது பைத்தியக்காரத்தனம்.வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்.இதையெல்லாம் சமாளிக்கத் தெரியவேண்டும்.உம்முடைய மனநிலை எனக்கு விளங்குது.உமக்கு அவள் மீது வந்த காதல் மாதிரி அவளுக்கும் உம்மீது வந்திருக்க வேண்டும்.அது தான் காதல்.
உமக்கு ஏற்பட்டது வெறும் கவர்ச்சிதான்.இதற்காக உம்மை வருத்திக் கொள்ளக்கூடாது.


என்னுடைய கதையை இதுவரைக்கும் நான் யாரிடமும் சொன்னதில்லை.இப்போது உமக்குச் சொல்கிறேன் தம்பி.இதைக் கேட்டால் நிச்சயம் உம்முடைய எண்ணம் மாறும்"
என்று தொடர்ந்தார் அவர்.


"உம்மைப் போலத்தான் நானும் ஒருத்தியை உயிருக்கு உயிராய் காதலித்தேன்.அவளுடைய வீடு எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்தது.இரண்டு பேருக்கும் இடையில் நல்ல பழக்கம்.நீண்ட காலமாக அவளைக் காதலித்து வந்தேன்.என்னுடைய காதலை அவளுக்குத் தெரியப்படுத்த முதலில் துணிவு இல்லை".

சரியான அறுவைக் கேஸ் ஒன்றிடம் மாட்டினோம் என்று அவன் நினைத்துக் கொண்டான்.அவர் விட்டபாடில்லை.

"தம்பி இடைக்கிடை நீரும் உம்.... ஊம்.... என்று சொல்லிக் கொண்டிருக்க வேணும்.அப்பத் தான் எனக்கு கதை சொல்கிற மூட் வரும்"  என்றார்.

அவனுக்கு வேறு வழியில்லை. "உம்"  என்றான்.

"அவள் வீட்டுப் பக்கம் இருந்து வருகிற நுளம்பை எல்லாம் நான் அடித்துக் கொல்வேன்.அது ஒரு வேளை அவளைக் கடித்திருக்கும் என்ற கோபத்தில்.அந்த அளவுக்கு அவளைக் காதலித்தேன்.
ஒரு நாள் என்னுடைய காதலை கவிதையாக நினைத்து கடிதமாக எழுதி அவளுக்குக் கொடுத்தேன்.நாங்கள் வெறும் நண்பர்களாகவே இருப்போம் என்று சொல்லிவிட்டாள்.நான் விட்டபாடில்லை.
கேட்டுப் பார்த்தேன்.பிறகு கெஞ்சிப் பார்த்தேன்.அவள் மசியவில்லை.கடைசியாக ஒரு முடிவு எடுத்தேன்.


அவளைத் தேடிப்போனேன்.அவள் எதிரே வந்து கொண்டிருந்தாள்.குறுக்கே கொண்டுபோய் சைக்கிளை நிறுத்தினேன்.நாளைக்குப் பின்னேரம் சரியாக ஐந்து மணிக்கு கோயில் ரோட்டில் இருக்கும் ஆலமரத்தடியில் உனக்காக காத்திருப்பேன்.என் மீது உனக்கு அன்பு இருந்தால் அங்கு வந்து என்னை விரும்புவதாகச் சொல்.அப்படி இல்லை என்றால் ஐந்து அரை போல வந்து என்னுடைய பிரேதத்தைப் பார்த்து என்னை வெறுக்கவில்லை என்றாவது சொல், என்று சொல்லி விட்டு வந்து விட்டேன்"

இடைக்கிடை அவன் "உம்" போட்டுக்கொண்டிருந்தான்.

"அவள் வருவாள் என்ற நம்பிக்கை இருந்தது.கூடவே கொஞ்ச பயமும் இருந்தது.அடுத்த நாள் பின்னேரம் நாலரை மணிக்கெல்லாம் நான் அந்த ஆலமரத்தடிக்குப் போய்விட்டேன்.மணியைப் பார்த்துக்கொண்டேன்.பொக்கட்டில் இருந்த 'பொலிடோல்' போத்தலையும் தொட்டுப் பார்த்துக்கொண்டேன்.நேரம் ஆகிக்கொண்டிருந்தது.எதிரே வந்த பெண்களெல்லாம் எனக்கு அவள் போலவே தோன்றியது.நேரம் நெருங்க நெருங்க அடிவயிற்றைக் கலக்கியது.
மணி ஐந்து அடித்தது.அவள் வரவில்லை.வரும் வழியில் ஏதாவது தடங்கல் ஏற்பட்டிருக்குமோ என்று இன்னும் பத்து நிமிடம் பொறுத்துப் பார்த்தேன்"

அவன் குறுக்கிட்டான்,  "பிறகு என்ன நடந்தது?"  கதையை கெதியில் முடித்து ஆளைக் கழற்றலாம் என்ற அவசரம் அவனுக்கு.

"அவள் வரவே இல்லை"  அவர் குரல் கொஞ்சம் தாழ்ந்தது.

"வேதனை,அவமானம்,வெட்கம்.அப்போது என்ன நினைத்தேன் என்று தெரியவில்லை,மருந்துப் போத்திலை எடுத்து ஒரேயடியாகக் குடித்துவிட்டேன்".  
தொடர்ந்து அவரால் பேச முடியவில்லை.எங்கோ தூரமாய் வெறித்துப்பார்த்தார்.

"பிறகு?" 

"பிறகு என்ன? அப்படியே செத்து விட்டேன்"

என்று அவர் சொன்னது மட்டும் அவனுக்குச் சரியாக விளங்கவில்லை.
மீண்டும் கேட்டான்.அவர் மீண்டும் சொன்னார்.
அப்போது தான் அவர் காலைப் பார்த்தான் அங்கே கால் இல்லை.
அவரைப் பார்த்தான் அது ஆள் இல்லை.

அடுத்ததாக அந்த இடத்தில் "ஆ......." என்ற அலறல் மட்டும் கேட்டது.