Saturday, 23 November 2013

முரண்பாடு






ஒருவன் ஒருத்தியை பார்த்தபோது

அலையெனக் காற்றில் தவழும் குழலும்
கலைமகள் வடிவெனக் கண்ட முகமும்
சிலைவடித் தவரின் கருத்தில் முளைத்த
விலையில்லாச் செல்வம் வேல்விழியாள் அழகே

கொடியிடையாள் எனவுரைக்க இடைபோலொரு கொடியில்லை
நெடுவளர் கருங்கூந்தல் போலொரு மேகமில்லை
முகிலிடை நீந்தும் முழுமதியும் ஈடில்லை
எகிநடைக் கன்னி வனப்பிற்கு இணையில்லை

அதே ஒருவன் அதே ஒருத்தியை பார்த்து; சில காலம் கழித்து

கருத்த உருவத்தை காகமெனக் கொண்டேன்
சிரித்து பல்காட்ட முகமெனத் தெளிந்தேன்
விரித்த கூந்தலில் நரைமுடிகள் தெரிய
பருத்த தேகத்தில் பாகமெது அறியேன்

கசங்கிய காகிதத்தில் கிறுக்கல்கள் போல
நசுங்கிய முகத்தில் சுருக்கங்கள் நிறைய
முந்தய வாழ்கையில் வந்தவள் இவளா
விந்தையா விதி கவினை வென்றதா?




1 comment:

Anonymous said...

வணக்கம்
கவிதையின் வரிகள் மிக அழகு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment