Wednesday, 27 November 2013
மண்ணுக்கீந்த மாவீரர்கள்
மண் ஈன்ற மறவர்களே - உயிரை
மண்ணுக்கீந்த மா வீரர்களே
விடுதலையே மூச்சாகி வேங்கையெனப் பாய்ந்தவரே
எழுதுகோலில் அடங்கிடுமா உங்களின் தியாகமே
பெற்ற அன்னைக்கும் மேலாய் தமிழ் ஈழம் உமக்கே
சுற்றமும் துறந்தே மண் மீட்டிடச் சென்றீர்
எத்துனை இடர் வந்த போதும் சோராமல்
எம்மினத்தின் இருள் நீக்கச் சுடரானீர்
வெற்றிக்கு அடிப்படை ஆயுதமே என்றால்
எப்போதோ அழிந்திருக்கும் எம்மினமே அடியோடு
உங்களின் வீரமும் உள்ளத்து வலிமையுமே
இத்தனை காலமாய் தமிழ் ஈழத்தைத் தாங்குது
எடுத்து நசுக்கி எறிந்துவிடப் பேனல்லத் தமிழன்
ஏமாந்து இனியும் அடிமையாகப் பேயனல்லத் தமிழனென்று
கொடுத்த அடியினில் காட்டினீர் தமிழன் வீரத்தை
எதிரிக்கு மட்டுமல்ல உலகிற்கே எடுத்து
நீங்கள் துயில்கின்ற இல்லங்கள் - சீர் கொண்ட
எங்கள் தமிழ் ஈழத்து ஆலயங்கள்
உங்களின் ஈகம் போகாது வீணாய் - ஓர் நாள்
ஐ நா விலும் பறக்கும் ஈழக்கொடி தானாய்
இளமைக்கால ஆசைகளெல்லாம்
எமக்காய் துறந்து சென்றீரே – உமக்காய்
விளக்குகளை ஏற்றிவைத்து வணங்குகிறோம்
வெளிச்சமாய் இருந்தெமக்கு வெற்றிகளைக் காட்டும்
ஈழ நாட்டின் எல்லைக் கோடுகள்
வரையப் படுகின்றன உங்கள் குருதியிலே
வீரத்தோடு வீழ்ந்த வித்துக்களே
விடியும் உங்களால் இனி தமிழ் ஈழத்திலே
(2008 மாவீரர் தினத்திற்காக எழுதி லண்டன் தமிழ் வானெலியில் ஒலிபரப்பானது.)
Labels:
கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment