Sunday 30 March 2014

அன்னையர் தினம்




பத்து மாதம்... பத்து மாதம்...
சொல்லிவிடலாம் சும்மா
ஆனால் சுமந்து பெற்றாளே அம்மா

கைத்தொலைபேசி கடிகாரம் கார்ச்சாவி
வெளியே போய்விட்டு வீட்டுக்குள் வந்ததும்
எடுத்து வைத்துவிடுவோம் மேசைமீது
வீணான பாரங்களை சுமப்பதற்கு
விரும்புவதில்லை நாங்கள் ஒருபோதும்

கருவிலே தாங்கி மடியிலே வளர்த்து
உதிரத்தால் உருவத்தை கொடுத்து
ஈன்றெடுப்பாள் அன்னை - அவளை
கடவுளுக்கும் மேலென்று
சொல்லித் தந்தனர் ஆன்றோர்

வலிக்குது என்று
எடுத்துவைக்கவா முடியுமா - இல்லை
உதைக்கிறதே என்று
அடிக்கத்தான் முடியுமா?
உரிய காலம் வரைக்கும்
வலிகளையும் வேதனைகளையும்
நம்மோடு தம்மில் சுமந்தவள் அல்லவா தாய்

உயிர்கொடுத்து உருக்கொடுத்து
உலகறியும் வகைகொடுத்து
பாலூட்டி சீராட்டி வளர்த்த நம் தாயை
அன்பினில் எம்மைச் செதுக்கிய எம் தாயை
இன்று எத்தனை பேர்தான் நினைக்கின்றோம்?

தன்மனைவி மகவீன்ற போது
தானும்கூட இருந்த நண்பர் ஒருவர்
வெளியே வந்து என்னிடம் சொன்னார்
"இப்பத்தான்டா தெரியுது எனக்கு
என் அம்மாவின் அருமை'' என்று

போதிமரத்தின் கீழே கவுந்து கிடந்தாலும்
ஞானம் வருவதில்லை எம்மில் பலர்க்கு
தாய்மை மட்டும் பெண்களுக்கும் - அவளை
தாங்கிப் பிடிக்கும் மட்டும் ஆண்களுக்கும் தம்
தாயின் அருமை தெரிவது குறைவு

யாரும் போனபின்னே படத்திற்கு
பூப்போட்டு என்ன பயன்
வாழும்போது அவர்களுக்கு மனநிறைவோடு
மகிழ்ச்சியைக் கொடுக்காவிடின்?

வருடத்தில் தினமொன்றை ஒதுக்கிவிட்டோம்
அன்னைக்கு வாழ்த்துச்சொல்லும் நிலைக்கு
அவள் ஊட்டிய பாலே உதிரமாய்
எங்கள் உடம்பிலே ஓடுவது உண்மையென்றால்
வணங்கிடுவோம் அவர்களை தினமே
இனி வருவதெல்லாம் அன்னையர்க்கு தினமே.