Sunday, 18 September 2011

காதலிலே தோல்வியுற்றான் (சிறுகதை)

      "போச்சுது, எத்தனை ஆசைகள், எத்தனை கனவுகள், எத்தனை கற்பனைகள்.... எல்லாமே போச்சுது.எனக்கு என்ன குறை? ஏன் அவளுக்கு என்னைப் பிடிக்கவில்லை?"
என்று மனதுக்குள்ளே குமுறிக்கொண்டிருந்தான் அவன்.


அவன்;  அவளைப் பார்த்தான்,அவளை நினைத்தான்,அவளைக் காதலித்தான்.

அவளுக்கு அவனைத் தெரியாது.பள்ளிக்கூடம் போகும் போதும் வரும் போதும், சனி ஞாயிறுகளில் ரீயூசன் வாசலிலும் அவனைப் பார்த்திருக்கிறாள்,அவ்வளவுதான்.
ஆறு மாதமாகக் காதலாம் என்று கடிதம் எழுதியிருக்கிறான்.
 "அர்த்தமற்ற செயல்.எனக்கு அவனைப் பற்றித் தெரியாது.அவன் மீது        காதலில்லை.சம்மதம் தா என்றால் எப்படி?"
யோசித்துப் பார்த்தாள். மறுத்து விட்டாள்.


இப்போது அவன் சோகப் பாடல்களை மட்டுமே கேட்கிறான்.அடிக்கடி கன்னத்தை தடவிப் பார்க்கிறான்,தாடி வளர்கிறதா என்று.

அன்று இரவு அவனுக்குப் பிடிக்கவில்லை.அப்படியே நடந்து போனான்.எதிரே சுடுகாடு.மயாணஅமைதி அப்படியே அங்கு இருந்தது.
மனதுக்கும் கொஞ்சம் அமைதி கிடைக்குமா என்று ஓரிடத்தில் அமர்ந்து விட்டான்.

சற்று நேரம் ஆகியிருக்கும்.அந்த வழியால் போன ஒருவர் அவன் அருகே வந்தார்.
"என்ன தம்பி,இந்த நேரத்தில இந்த இடத்தில என்ன செய்கிறீர்?"
அக்கறையோடு கேட்டார்.


மனதை அழுத்தும் சுமையை யாரிடமாவது சொல்லலாம்.கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் அல்லவா.எல்லாவற்றையும் அவரிடம் கூறினான்.

"இந்த வாழ்கையே வெறுத்து விட்டது.பேசாமல் சாகலாம் போல இருக்கு" என்றான்.

"சீச்சீ..... என்ன இது பைத்தியக்காரத்தனம்.வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்.இதையெல்லாம் சமாளிக்கத் தெரியவேண்டும்.உம்முடைய மனநிலை எனக்கு விளங்குது.உமக்கு அவள் மீது வந்த காதல் மாதிரி அவளுக்கும் உம்மீது வந்திருக்க வேண்டும்.அது தான் காதல்.
உமக்கு ஏற்பட்டது வெறும் கவர்ச்சிதான்.இதற்காக உம்மை வருத்திக் கொள்ளக்கூடாது.


என்னுடைய கதையை இதுவரைக்கும் நான் யாரிடமும் சொன்னதில்லை.இப்போது உமக்குச் சொல்கிறேன் தம்பி.இதைக் கேட்டால் நிச்சயம் உம்முடைய எண்ணம் மாறும்"
என்று தொடர்ந்தார் அவர்.


"உம்மைப் போலத்தான் நானும் ஒருத்தியை உயிருக்கு உயிராய் காதலித்தேன்.அவளுடைய வீடு எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்தது.இரண்டு பேருக்கும் இடையில் நல்ல பழக்கம்.நீண்ட காலமாக அவளைக் காதலித்து வந்தேன்.என்னுடைய காதலை அவளுக்குத் தெரியப்படுத்த முதலில் துணிவு இல்லை".

சரியான அறுவைக் கேஸ் ஒன்றிடம் மாட்டினோம் என்று அவன் நினைத்துக் கொண்டான்.அவர் விட்டபாடில்லை.

"தம்பி இடைக்கிடை நீரும் உம்.... ஊம்.... என்று சொல்லிக் கொண்டிருக்க வேணும்.அப்பத் தான் எனக்கு கதை சொல்கிற மூட் வரும்"  என்றார்.

அவனுக்கு வேறு வழியில்லை. "உம்"  என்றான்.

"அவள் வீட்டுப் பக்கம் இருந்து வருகிற நுளம்பை எல்லாம் நான் அடித்துக் கொல்வேன்.அது ஒரு வேளை அவளைக் கடித்திருக்கும் என்ற கோபத்தில்.அந்த அளவுக்கு அவளைக் காதலித்தேன்.
ஒரு நாள் என்னுடைய காதலை கவிதையாக நினைத்து கடிதமாக எழுதி அவளுக்குக் கொடுத்தேன்.நாங்கள் வெறும் நண்பர்களாகவே இருப்போம் என்று சொல்லிவிட்டாள்.நான் விட்டபாடில்லை.
கேட்டுப் பார்த்தேன்.பிறகு கெஞ்சிப் பார்த்தேன்.அவள் மசியவில்லை.கடைசியாக ஒரு முடிவு எடுத்தேன்.


அவளைத் தேடிப்போனேன்.அவள் எதிரே வந்து கொண்டிருந்தாள்.குறுக்கே கொண்டுபோய் சைக்கிளை நிறுத்தினேன்.நாளைக்குப் பின்னேரம் சரியாக ஐந்து மணிக்கு கோயில் ரோட்டில் இருக்கும் ஆலமரத்தடியில் உனக்காக காத்திருப்பேன்.என் மீது உனக்கு அன்பு இருந்தால் அங்கு வந்து என்னை விரும்புவதாகச் சொல்.அப்படி இல்லை என்றால் ஐந்து அரை போல வந்து என்னுடைய பிரேதத்தைப் பார்த்து என்னை வெறுக்கவில்லை என்றாவது சொல், என்று சொல்லி விட்டு வந்து விட்டேன்"

இடைக்கிடை அவன் "உம்" போட்டுக்கொண்டிருந்தான்.

"அவள் வருவாள் என்ற நம்பிக்கை இருந்தது.கூடவே கொஞ்ச பயமும் இருந்தது.அடுத்த நாள் பின்னேரம் நாலரை மணிக்கெல்லாம் நான் அந்த ஆலமரத்தடிக்குப் போய்விட்டேன்.மணியைப் பார்த்துக்கொண்டேன்.பொக்கட்டில் இருந்த 'பொலிடோல்' போத்தலையும் தொட்டுப் பார்த்துக்கொண்டேன்.நேரம் ஆகிக்கொண்டிருந்தது.எதிரே வந்த பெண்களெல்லாம் எனக்கு அவள் போலவே தோன்றியது.நேரம் நெருங்க நெருங்க அடிவயிற்றைக் கலக்கியது.
மணி ஐந்து அடித்தது.அவள் வரவில்லை.வரும் வழியில் ஏதாவது தடங்கல் ஏற்பட்டிருக்குமோ என்று இன்னும் பத்து நிமிடம் பொறுத்துப் பார்த்தேன்"

அவன் குறுக்கிட்டான்,  "பிறகு என்ன நடந்தது?"  கதையை கெதியில் முடித்து ஆளைக் கழற்றலாம் என்ற அவசரம் அவனுக்கு.

"அவள் வரவே இல்லை"  அவர் குரல் கொஞ்சம் தாழ்ந்தது.

"வேதனை,அவமானம்,வெட்கம்.அப்போது என்ன நினைத்தேன் என்று தெரியவில்லை,மருந்துப் போத்திலை எடுத்து ஒரேயடியாகக் குடித்துவிட்டேன்".  
தொடர்ந்து அவரால் பேச முடியவில்லை.எங்கோ தூரமாய் வெறித்துப்பார்த்தார்.

"பிறகு?" 

"பிறகு என்ன? அப்படியே செத்து விட்டேன்"

என்று அவர் சொன்னது மட்டும் அவனுக்குச் சரியாக விளங்கவில்லை.
மீண்டும் கேட்டான்.அவர் மீண்டும் சொன்னார்.
அப்போது தான் அவர் காலைப் பார்த்தான் அங்கே கால் இல்லை.
அவரைப் பார்த்தான் அது ஆள் இல்லை.

அடுத்ததாக அந்த இடத்தில் "ஆ......." என்ற அலறல் மட்டும் கேட்டது.

1 comment:

Anonymous said...

superb...

Post a Comment