Thursday, 31 October 2013

அடங்குமோ என்றேனும்


ஒருமுறை இழுப்போமென்று
பழகிய பழக்கமின்று
வழக்கமாய் ஆனதால் அதை
வழியனுப்ப முடியாமல்
வெளிவிடுகிறது புகைதனைச் சிகரட்

உண்மையிலும் உண்மையே
ஒரு முனையில் நெருப்பும்
மறு முனையில் முட்டாள் வாயுமென்று
வழிமொழிந்த அறிஞர் உரையது

இழுத்து விட்ட புகையினிலே
இருளாய்த் தெரிவது
எதிர்காலம் கூடத்தான்

நோய் வந்து தாக்கியபின்
நோபட்டு அழுதாலும் பயனில்லை - நாமும்
தீயிட்டு அழித்திட்ட வாழ்வுதனை

புன்னகை தொலைந்த உதடுகளில்
புகையிலையின் நாற்றம்
அண்மையில் சென்று அளவளாவ
அடுத்தவர்க்குக் குமட்டும்

கறுக்கும் உதடுகள் கெடுக்கும்
முகத்தின் செழிப்புதனை
கடைசிக்காலம் முழுதும்
கழியும் இருமலிலே

ஊதி ஊதித் தள்ளியதில்
உருப்படியாய் நடந்ததென்ன?
உடல் நலத்திற்கும் கேடு
நலமிக்க சுவாசத்திற்கும் கேடு

உருவமில்லா உயிர்
இங்கேதான் போகிறது புகைவடிவில்
இருந்தும் ஏனோ
இன்னும் புகைக்கின்றார்
விளைவு தெரிந்தவரும்
தமக்கும் கேடாக்கி
தம்மை அண்டியவர்க்கும் தீதாக்கி
விடுக்கும் புகையிது
அடங்குமோ என்றேனும்Wednesday, 30 October 2013

ஒரே ஒரு முறை

கறுக்காத குண்டுமணி குப்பையிலே கிடந்ததுபோல்
மறக்காத மங்காத நினைவுகளும் மூளையிலே கிடக்குது

ஆருக்கோ சொந்தமான தேசத்தில் 
அகதிவாழ்க்கையிலும் ஆடம்பரம் காட்டி
காருக்கும் காசுக்குமாய் கனகாலம் திரிஞ்சாச்சு

களைத்துப்போன நேரத்திலே இழுத்துவிட்ட மூச்சோடு
ஒட்டிக்கொண்டு வந்தது ஓரமாய் 
அந்த மண்ணின் வாசம்முன்வளவுத் தென்னைகளும் பின்வீட்டு மாமரமும்
நான் வளர்த்துப் பின் கிணற்றில் விட்டுவந்த மீன்களும்
மீண்டும் மீண்டும் என்கனவிலே வந்துவிட்டுப் போகின்றன

ஒழுங்கைப்புழுதி உடம்பெல்லாம் ஒட்ட 
உறுண்டு விளையாடிய பொழுதுகள் எத்தனை
பூவரசந்தடி முறித்துக்கொடுத்து செய்த குழப்படிக்காய்
அம்மாவிடம் வாங்கிய அடிகள்தான் எத்தனை

முற்றத்துச் செம்பருத்தியும் கோடியிலே நான் நட்ட
செவ்விளநீர்க் கன்றும் இருக்குமோ இன்னும்
கிணற்றடியில் குழிதோண்டிப் புதைத்துவிட்டு வந்த
அந்த ஒரு ரூபாய்க் காசுக்கும் என்ன நடந்திருக்குமோவெய்யிலிலே மண் சுட்டாலும்
வெறுங்காலோடங்கே நடக்கவேண்டும் 
பிரேக் இல்லாச் சைக்கிளிலே 
வைரவர் கோயிலடி வீதியெல்லாம் சுற்றவேண்டும்

பக்கத்துவீட்டு நாய் எப்படியும் செத்திருக்கும் - அதனாலே
இரவிலே தனிமையிலே திரியலாம் இப்போது
குஞ்சுமிஸ் இன்னமும் இருந்தால் 
கொஞ்சம்  போய்ப் பார்க்கவேண்டும் அவரையும்
எப்படியெல்லாம் வளர்ந்து விட்டேன்
என்பதனைக் காட்டவேண்டும் அவரிடமும்
வேலாயுதம் மாஸ்டருக்கும் 
போய் வணக்கம் சொல்லவேண்டும்

இப்படி எத்தனையோ ஆசையுண்டு என்னோடு
என்றேனும் ஓர் நாளில்
போகவேண்டும் சொந்த ஊருக்கு
காணவேண்டும் கண்குளிர - நான்
வாழ்ந்த இடத்தையும் வளர்ந்த வீட்டையும்
ஒரே ஒரு முறையேனும்.


Tuesday, 29 October 2013

நிலாச்சருகு
எனக்கு வயது எண்பத்தாறு
நான் இருக்குமிடம் முதியோர் வீடு

அலை அடித்து சாய்ந்த மரமென
அந்த அலை அரித்து சென்ற மணலென
ஆகிவிட்டது என் வாழ்க்கை
முதிர்ந்து விட்டது என் யாக்கை

கனாக் கண்ட வாழ்வெங்கே – கால்
துள்ளித் திரிந்த காலமெங்கே

சுட்டிய விழிப்பார்வை எங்கே – என்
கட்டழகு தேகம் எங்கே

சரிந்த நடை அழகு எங்கே – நான்
சிரித்திருந்த பொழுதுகள் எங்கே

சுவாசித்த காற்றெங்கே – என்னை
நேசித்த காதலிகள் எங்கே

சுற்றித்திரிந்த வீதிகள் அழிந்தே தான் போயின
மூட்டுவலியும் முதுகுவலியும் மிச்சமாய் ஆகின

தோள் கொடுத்த தோழர்கள் காணாமல்; போனார்கள்
சொந்தங்களும் பந்தங்களும் சொல்லாமல் ஏகினர்

ஆடி அடங்கிப் போகும் தருணம்
மிச்சமிருக்கும் ஆசைகள் முளைத்து எழும்

என்ன செய்வது
வாழ்கை திரும்பப் போவதில்லை
இந்த வயதும் குறைய வழியில்லை
ஆற்றுவதற்கு இங்கு யாருமில்லை
இது நான் முடியும் வேளை.Monday, 28 October 2013

பொய் இல்லாத பொய்கள்

அழகு தமிழை ஆராதிக்கும்
கவிதை கொண்ட கருவில்

மழலைக் கொஞ்சலில் மதியை மயக்கும்
சில வஞ்சகர் காட்டும் அன்பில்

பழிக்கு அஞ்சா பாதகர்கள் தம்மை
வெளிக்குக் காட்ட போடும் வேடத்தில்

கண்ணுக்குத் தெரியாமல் உள்ளுக்குள் இருக்கும்
பொய் இல்லாத பொய்கள்

அவதாரம் எடுத்தனராம்
அரக்கர்களை அழித்தனராமென
கதைகளில் மட்டுமே காக்கின்ற கடவுள்கள்

முற்றிப்போன சிலரை ஏமாற்றிப் பிழைக்க
கடவுளின் பெயரால் நடக்கின்ற கூத்துக்கள்

கிடைக்காத வெண்ணெய்க்காய்
கடைகின்ற மத்துக்களாய்
நடக்காத ஒன்றுக்காய்
துடிக்கின்ற ஆசைகள்

விளையாட்டாய்ச் சொன்னாலும் உண்மையே
பொய் இல்லாத பொய்கள் இவைகளே

எல்லாம் மாயை என்றவர் கூற்றே
எங்கினும் காண்கினும் தென்படும் உண்மை

வாழ்க்கை பொய்யே வனப்பும் பொய்யே
யாக்கை பொய்யே யவனம் பொய்யே
சேர்க்கை பொய்யே செயலும் பொய்யே

தீர்க்கமாய்த் தெரியும் இவை
பொய் இல்லாத பொய்களே.Sunday, 27 October 2013

பெற்றவரே பேறு பெற்றவர்

உறுண்டு பிரண்டு படுத்தாலும் - எழுந்திட
உடல்நிலை இடம்கொடாது விடினும்
அடித்தெழுப்பும் அதிகாலையில் அலாரம்
துடித்தெழுவார் ஓடுவார் துன்புறும் தம்நிலை நோக்கார்

குளிரில் பனியில் காதும் மூக்கும் விறைக்க
கை இடுக்குகள் வெடித்து ரத்தம் சிதற
ஓடுவார் ஓடுவார் வேலையே வேலையென்று

நல்ல கனி தரும் சாறு வேண்டி
வல்லெனப் பிழிந்திடும் யந்திரமாய்
வல்லமையுள்ள வேலைத்தளங்கள்

செய்வேலைக்கேற்ற ஊதியமும்
வரிகளைக் கழித்தே வங்கிக்கு வரும்
செலவுக்கு வழிகோலும் அவசியத் தேவைகள்
மிச்சம் பிடிப்பர் சேமிப்பர் ஆயினும் இவர்

இளமைக்கால ஆசைகளெல்லாம்
கனவுகளேடு கரைந்துபோகும்
இரவுகளெல்லாம் இரண்டாவது
வேலையோடு முடிந்துபோகும்

ஊரிலிருந்து அழைப்பு வரும் பணம் வேண்டி
அனுப்பியே ஆகவேண்டும் கடன் வேண்டி
பெற்றவர் உற்றவர் கூடப்பிறந்தவர் உறவினர்கள்
தேவையெல்லாம் தீர்த்து வைப்பர் - இவர்
தம் தேவைகள் எதையும் தீர்த்து வைக்கார்
தமக்கென எதையும் சேர்த்தும் வைக்கார்

வட்டிக் கடனை முடிக்கும் முன்னே
விழுந்திடும் சொட்டை தலையின் மீதே
வயதும் எட்டிப் போய்விடும் இவர்க்கே - பின்பெங்கே
முட்டிமோதுவர் பெண்கள் மணம் முடிப்பதற்கே

அடுத்தவரை இன்புறச் செய்து வாழ்தலே மேலென்று
முடிந்தவரை தமை வருத்திடுவர் தேய்ந்திடுவர்
இவர் யாரென்று இன்னும் விளக்கிடவும் வேண்டுமா

புலம்பெயர் மண்ணிலே நிலைகுலையா நின்று
வாழ்வோடு போராடும் வல்லமைமிகு இளைஞர்கள்
தாமுருகி அடுத்தவர்க்கே ஒளிகொடுக்கும் ஏந்தல்கள்

இவரை பெற்றவரன்றோ பேறு பெற்றவர்
இவர்தமை பெற்றவரே பேறு பெற்றவர்.Saturday, 26 October 2013

படிகள்
தடம் மாறும் வாழ்நிலைப் படிகள்
தடுமாறும் சில படிநிலைகள்
ஏறி இறங்கப் பற்பல படிகள்
எல்லாம் சொல்லும் உயிருள்ள கதைகள்

பார்வையில் உள்ளம் பறிகொடுத்து
பாழாப் போனது முதற்படி
கண்களை மட்டும் நம்பிக்கொண்டு
காதலில் வீழ்ந்தது ரெண்டாம் படி

முட்டாளைப் போலே பின்னாடி
மெனக்கட்டுத் திரிந்தது மூன்றாம் படி
நல்லவர் அறிவுரை கேளாமலே நானும்
சொன்னது காதலை நாலாம் படி

நிரந்தரம் அதுவென்று நம்பி
அருகிருந்த பொழுதுகள் ஐந்தாம் படி
வெந்து நீறாக வந்த பிரிவில்
நொந்து நூலானது ஆறாம் படி

ஏளனப் பார்வையில் எல்லாமே பொய்யாக
மடலேறிச் சாய்ந்தது ஏழாம் படி
படிப் படியாய் முன்னேறி தடுக்கி விழுந்த பின்னாடி
கிட்டிய ஞானம் எட்டாம் படி.
Friday, 25 October 2013

ஓட்டம் ஓட்டம்

ஓட்டப் பந்தயம்
ஓடுபவர்கள் எல்லோருமே வெல்லமுடியாது
வாழ்க்கைப் பந்தயம்
ஓடினால் மட்டுமே வெல்லமுடியும்

விஞ்ஞான வளர்ச்சியில் வேகமெடுக்குது உலகம்
ஈடுகொடுத்து நாம்வாழ எடுக்கவேண்டும் ஓட்டம்
அன்றேல் வேடிக்கைபார்க்கும் கூட்டத்தில்
வீணே கழியும் காலம்

ஓடி ஓடிப் படிக்கவேண்டும் - நாளும்
புதிது புதிதாய் அறியவேண்டும்
இன்று நான் அறிந்தது அதிகம்
நேற்றெனக்கு தெரிந்ததை விட
என்று தினமும் உணரும்வண்ணம் படிக்கவேண்டும்

காலத்தின் ஓட்டமதை கடிகாரம் காட்டும்
கடிகாரவோட்டம் கழியும் நாட்களைக் காட்டும்
எண்ணிய கருமம் விரைந்து கைகூட
நினைத்தபடி எல்லாம் நன்றெனவே நடக்க
காலத்தை முந்தி ஓடவேண்டும் ஓட்டம்

ஆசைகள் மனதுக்குள் அடங்கிவிடக் கூடாது
சாதிக்க நினைப்பவர்கள் ஓட்டத்தை நிறுத்திவிடக் கூடாது
மனதும் உடலும் களைத்துப் போகலாம்
உணர்வினில் உதிரத்தில் ஓய்வில்லாத ஓட்டம்வேண்டும்

கனவுகள் நனவாக லட்சியம் கைகூட
நேரத்தை வென்று ஓடவேண்டும் ஓட்டம்
வரலாறு போற்றும் வெற்றிகளைக் காட்டும்.
Thursday, 24 October 2013

நாம் ஒன்று நினைக்க...
நாம் ஒன்று நினைக்க
வேறொன்று நடக்குமென்று 
அனுபவத்தில் கண்டு கொண்டேன்
அதனை இங்கு சொல்லவந்தேன்

வாழ்க்கை என்னும் கொடிமரத்தில்
ஏற்றி வைத்த ஆசைகளே
காற்றில் மெல்ல படபடத்தே
பறந்துபோகும் கையை விட்டே

நேற்று வரைக்கும் நெஞ்சுக்குள்ளே 
தேக்கிவைத்த எண்ணங்களே
காட்சி மாற கதையும் மாற 
சுட்டெரிக்கும் துன்பங்களே 

பாதை ஒன்றைத் தேர்ந்தெடுத்து 
பயணம் செல்லும் போதினிலே 
பாழும் விதியின் வேட்க்கையினால்
தீதே மட்டும் விளைவாகி 
ஏதோ ஒன்றில் முடிந்துவிடும்

எண்ணிய இலக்குகள் தவறிவிட
சென்றடைந்த தூரங்கள் வேறாக
நடந்துவிடும் நினைத்ததற்கு மாறாக

தான் நடத்தும் நாடகத்தில்
எழுதிவைத்தான் இறைவன் முடிவுகளை
கதையை மாற்ற எத்தனிக்கும்
நடிக்க வந்த பாத்திரங்கள்

இலவு காத்த கிளியென   
ஏங்கும் நிலை மானிடத்தில்
இந்த உண்மையை உணர்ந்து கொண்டால்
மறைந்துபோகும் துன்பங்களே.


Wednesday, 23 October 2013

காற்று வழி காதினிலே....(லண்டன் தமிழ் வானெலிக்காக எழுதிய கவிதை)
http://www.firstaudio.net/


காற்று...
உயிர்களின் வாழ்தலுக்கு ஆதாரம்
இல்லையெனில்
நிலவையே கூறுபோட்டு
மனிதன் கூறியிருப்பான் ஏலம்

உயிரினங்களில் பேதைமை
உடல் உறுப்புக்களில் கூட சிலருக்கு வஞ்சனை
ஆயினும் காற்றை மட்டும்
கடவுள் தந்தான் பொதுவில்

வெளியே உலவும் மட்டும் காற்று
உள்ளே சென்று விட்டால் மூச்சு
அது நின்று விட்டால் எல்லாமே போச்சு

இப்படியான காற்றிலே ஒலியை
கலந்து விட்டது வானொலி
இதனை கண்டுபிடித்து தந்தான்
மார்க் கோணி

சிந்தனைகளும் கவிகளும் செய்திகளும்
சொந்தப் பாடல்களோடு நல்ல கதைகளும்
வண்ணமிகு வார்த்தையாலங்களும்
எண்ணி எண்ணி சிரித்திட
நகைச்சுவை முத்துக்களும் என
நம் செவிக்கு விருந்தாகும்
நிகழ்ச்சிகள் ஏராளம்

கருத்து பகிர்விற்கு உதவியது மொழி
அதனை விரிபு படுத்தி செய்யுது வானொலி
புலம்பெயர் தேசங்களிலே
எமது மொழியை வாழவைப்பதும் வானொலிகளே
அதிலும்
செம்மை மொழியாம் தமிழ் மொழியை
அடுத்த எமது தலைமுறைக்கும்
எடுத்துச் செல்லுது எமது
லண்டன் தமிழ் வானொலி

வானலைகளின் ஊடே வருவதெல்லாம் இன்பமா இல்லை
வானொலியிலே நாம் கேட்பதெல்லாம் இன்பமா
இல்லவே இல்லை....

சான்றோர் சிந்தனையில் ஊற்றெடுத்து
கலையகத்திலே உருவெடுத்து
காற்றுவழி காதினிலே
நம்மை வந்து சேரும்
நல்ல தமிழ்ச் செல்வம்
அதுவே செவிக்குள் பாயும் இன்பம்.Tuesday, 22 October 2013

எண்ணிப்பார் மனிதா நீ.


ஒரு நாளில் வாடும் பூவுங்கூட
வாசம் வீச மறப்பதில்லை
பல கோடி ஆண்டு போன பின்பும்
ஆழக்கடலும் ஓய்வதில்லை

ஏனோ மானிடா!
அஞ்சி அஞ்சி ஓடுகிறாய் - நீ
பிறந்த காரணம் என்னானது
உன்னாலே பலருக்கு
வாழ்க்கை வீணாகுது

பொன்னான பொழுதுகள்
எண்ணாமல் கழித்தாலும்
மண்ணோடு போகும் தருணம்
மனம் வருந்தவே வேண்டும் நீ

இன்பச் சொல் கூறு - அடுத்தவர்க்கு
இன்முகத்தைக் காட்டு - முடிந்தவரை
துன்பப்படும் எவர்க்கும் ஓடிச்சென்று
துயர் துடைக்கப் பழகு

அடுத்தவர் மனங்களில்
விதைக்கின்ற நினைவுகளை
சிறப்பாக விதைத்து விடு

புற அழகை மெருகூட்டி
பேரழகாய்த் தெரிந்தாலும்
உள்ளத்து எண்ணங்களே
ஒப்பனை முகத்திற்கு
அப்பாலும் நின்று
உரித்தான முகத்தைக் காட்டும்

எண்ணிப்பார் மனிதா!
உலகமே அழிந்து - நீ
கடைசியாய் எஞ்சினால்
தனியொரு மனிதனாய்
தவிப்பாயோ? மாட்டாயோ?

எனது எனதென்று ஏனின்னும் அகந்தை
உயிரினங்கள் எல்லாமே
ஒருவனது குழந்தை

அடுத்தவரை நேசி
அன்பினால் எதையும் செய்
ஆணவம் ஒரு குப்பை
ஒதுக்கிவை அதனை
செழிக்கும் உன் வாழ்க்கை.


Monday, 21 October 2013

எட்டாப்பழம்

என் இருதயம் ஒருகணம்
இடம்மாறித் துடித்தது
உண்மையில் நீ அழகாகத்தான் இருந்தாயா
இல்லை என் பார்வைக்கு மட்டும்
அப்படியாய்த் தெரிந்தாயா

தடுமாறி விட்டேன் ஒருதரம்
பார்வையில் என்ன தடிகளா எறிந்து சென்றாய்

உன் வனப்பென்ன இடை வளைப்பென்ன
உடல் வடிப்பென்ன நடை எடுப்பென்ன
முகச் செழிப்பென்ன முத்துப்பல் சிரிப்பென்ன
இலக்கியங்கள் எல்லாம் உன்னைத்தான் பாடினவோ

என்னை உச்சுக்கொட்ட வைத்து
நாவில் எச்சில் சொட்டவைத்தாயே

என்ன இது சோதனை
நான் முந்திவிட்டேனா - இல்லை
நீ பிந்திவிட்டாயா

நல்லவேளை இப்போது
என்மனைவி அருகிலில்லை
அண்டை வீட்டுக்காரி சிரித்தாலே
சண்டைக்கு வருவாள் ராட்ஷசி

உன்னை நான் இமைக்காமல்
அங்கம் அங்கமாய் ரசித்தது
அவளுக்கு மட்டும் தெரிந்தால்
என் மண்டையைத்தான் அடித்து உடைப்பாள்

நானெரு நல்ல ரசிகன்
கழுதையின் வாலிலும் அழகைக் காண்பவன்
அப்படி இருக்க - இப்படி
ஒட்டுமொத்த அழகையும் குத்தகைக்கு எடுத்த
உன்னில் கண்ணை மேயவிட்டால்
மனம் எப்படி பொறுக்கும்

நீ எட்டாத பழம் தான்
சீ.... சீ.... புளிக்கும் என்று சொல்ல
பொய் எனக்கு வருகுதில்லை