Tuesday 20 September 2011

ஆசைகள்




ஒன்றல்ல ரெண்டல்ல ஆசைகள்
ஓராயிரம் தாண்டும் சேர்கையில்
இன்றல்ல நேற்றல்ல இதயத்தில்
இது எப்போதும் கேட்கின்ற ஓசைகள்


முடிந்தவரை முடிகின்ற ஆசைகள் - சிலது
கடைசிவரை முடியாத ஆசைகள்
சுமையாகக் கனக்கின்ற ஆசைகள் - நினைத்தாலே
சுகமாக இனிக்கின்ற ஆசைகள்
ஆசைகள் ஆசைகளே - முழுத்
துறவிகளும் துறக்காத ஆசைகளே


பாவம் செய்யாத மனம் - உதவிக்கு
பலனை நாடாத குணம்
பாசம் வைக்கின்ற உறவு - நம்பி
மோசம் போகாத தெளிவு
சமுத்திரம் கொள்ளாத அறிவு - பிறருக்கு
உபத்திரம் செய்யாத கனிவு
நினைத்ததும் ஈடேறுமா ஆசைகள்
விருப்பம் போல் நிறைவேறுமா ஆசைகள்


நலிந்தவர்கெல்லாம் நன்மை வேண்டும்
நாடுகள் தோறும் அமைதி வேண்டும்
வயிற்றுக்கில்லா வறுமை ஒழியவேண்டும்
வருத்தம் நோய் துயரம் அழியவேண்டும்
கற்றவர் தெளிவு எல்லோர்க்கும் வரவேண்டும்
கண்ணோக்கும் திக்கெல்லாம் வசந்தம் வேண்டும்


வேண்டும் வேண்டும் என்கின்ற ஆசைகளே
விளைவு தீமையில் முடிந்தாலே துன்பங்களே
ஆசைகள் ஆசைகளே – உயிரை
வாழ்விக்கும் அசைவுகளே


No comments:

Post a Comment