Sunday, 22 February 2015

விதி இவ்வளவு....




நீ
எழும்பிப் போன
எந்தவெரு காலையும்
உனக்கு சொல்லியிருக்காது
உன் விடியலுக்காய்
ஒருத்தன்
காத்திருந்தான் என்று

நீ
கடந்து சென்ற
கடைசி சாலை கூட
உனக்கு நினைவிலிருக்காது
ஆனாலும் அது சொல்லும்
அதன் கடைசியில் ஒருத்தன்
உனக்காக காத்திருந்தான் என்று

பசிக்காக
நீயும் சாப்பிட்டிருப்பாய்
ஆனால்
யார் உனக்கு சொல்லியிருப்பார்
உனக்காக ஒருத்தன்
பட்டினியாய் கிடந்தான் என்று

யார் யாரோ மீதெல்லாம்
நீ அன்பு காட்டும்போது
உன் அறிவுக்கு எட்டியதா
உன் மடிமீது கிடந்து
ஆராரோ கேட்க
ஒருத்தன் இங்கே
துடிக்கிறான் என்று

வசதிக்காய்
நீ உன் வாழ்க்கையை
அமைத்துக்கொண்டு
விதி அவ்வளவே என்றாலும்
உன்னால் வீணான வாழ்வதனை
ஒருத்தன் ஏற்றுக்கொண்டான்
விதி இவ்வளவே என்று.



Wednesday, 11 February 2015

கணவனின் சப்பாத்து.....



.... கடவுளே... இன்னும் கொஞ்ச நேரம் களிச்சு
இந்த பாளாப் போன அலாரம் அடிக்கக்கூடாதா...
எந்த நாசமாய்ப் போனவன் இதை கண்டுபிடிச்சானோ....
இப்பத்தான் கண்ண மூடுறன் அதுக்குள்ள டீங்...டீங் எண்டு கத்துது.

காலமை எழுந்தா அதில இருந்து ஒரே ஓட்டம். மனுசருக்கு கொஞ்சமாவது நிம்மதி இருக்கா?
நான் எழும்பினால் மட்டும் சரியா? பிள்ளைய எழுப்போனும். முதல்ல கொஞ்சோனும் பிறகு கெஞ்சோனும் கடைசியில அப்பாட பெல்ட எடுக்கவோ எண்டு அதட்டோனும். அதக்குப் பிறகு அவன வெளிக்கிடித்திப்போட்டு
என்ர மனுசன எழுப்போனும்.
பிள்ளை எண்டாலும் பறவாயில்லை கத்தினால் எழும்புவான்
ஆனா இந்த மனுசன் இரவில என்ன இழவ குடிக்குதோ தெரியேல்ல
இழுத்து இழுத்து போத்திக்கொண்டு படுக்குது.

எண்டாலும் அதையும் எழுப்பி வேலைக்கு அனுப்பிப் போட்டு
எங்களோடய வந்து ஒட்டிக்கொண்டிருக்கும் அவர்ட அப்பாவுக்கும் தேத்தண்ணி போட்டு குடுத்து சாப்பாடும் எடுத்து வச்சுட்டு 
கடைசியில நானும் அவசர அவசரமாய் வேலைக்குப் போயிட்டு வந்து, வீட்டு வேலையையும் பாத்திட்டு மனுசனுக்கும் நோகாமல் நடந்து பிள்ளைக்கும் ஹோம் வெர்க் சொல்லிக் குடுத்து இரவுக்கு சாப்பாடும் செஞ்சு எல்லாருக்கும் குடுத்துப்போட்டு....
சிவனே எண்டு படுத்தா கறகற கீச் கறகறகீச் என்டு கேக்குது.
எழும்பி வந்து பாத்தா என்ர மாமனார், அதாவது என்ர மனுசன்ட அப்பா
என்ர மனுசன்ர சப்பாத்துக்கு பொலிஷ் போட்டுக்கொண்டிருக்காரு.
என்ன மாமா இந்த நேரத்தில இதெல்லாம்
எண்டு எரிச்சலோட கோட்டால்
பிள்ள இதெல்லாம் நான் இப்ப தானோ செய்யிறன் அவன் நர்சரி போற காலத்தில இருந்து நான் தானே அவனுக்கு இதெல்லாம் செய்யிறன் எண்டு சொல்லீட்டு போகேக்கில வேதம் புதிதுல சத்தியராயுக்கு விழுந்த போல எனக்கும் ஒரு அறை விழுந்திச்சு.

என்ன இருந்தாலும், அவனே வளர்தாலும், அப்பாவுக்கு எப்பவுமே மகன், மகன் தானே.....




Thursday, 18 September 2014

ஏய் எருமை மாடு.......




அன்பே நீ எருமை மாடு
மேலே மழை பெய்தது போலே
போனால் போனால் ஆகுமா
நீ வெறுத்தால் என் காதல்
பொய்த்துப் போகுமா

உன் மேலே நான் வைத்த ஆசை - அது
நீ போன கோவிலின் மணி ஓசை
உன் செவிதனை சேராமல் போய்விடுமா
என் மனம்தனை ஆறாமல் செய்திடுமா

நானும் தான் கடவுளை தேடினேன்
என் காதல் மெய்ப்பட வேண்டினேன்
நான் என்ன நயன் தாராவையா கேட்டேன்
நாசமாய்ப் போன உன்னைத்தானே கேட்டேன்

என்னை ஏன் அவன் தண்டித்தான்
உனைச் சேராமல் செய்வித்தான்
காதலை நான் வெறுக்கவா - இல்லை
கடவுளே இல்லையென்று நான் மறுக்கவா

நான் இன்னும் நானாகவே இருக்கவா
இல்லை எதிர் காலத்திலே
எனை நீ வெறுத்ததற்காய்
உனை வருந்திடச் செய்திடவா?????


Sunday, 3 August 2014

என்னை மறந்த பொழுதும்...நான் உன்னை மறக்கவில்லையே...






காற்றிலே மேகம் தானே
கலைந்து தான் போவது போலே
கானலின் நீராய் நீயும்
போனது தானோ வாழ்க்கை.....

அன்று ஏனோ அந்த அவசரம்
இன்று தானே வந்த சமரசம்
கொஞ்சம் பொறுத்திருந்தால்
என்னை நினைத்திருந்தால்
எதற்கு இந்த சாராம்சம்
எதனால் இந்த போராட்டம்

நீ இழந்தவற்றில்
ஒன்றாக நானும் இருக்கேனா
நீ பெற்றதிலே இல்லாது
நானும் போனேனா???

நீ ஏதுமில்லை
எனக்காருமில்லை
என்றே நீயும் ஆனாயேய்

இது போதவில்லை
நீ சாகவில்லை

என்றே வீழ்த்திச் சென்றாயே..




Sunday, 30 March 2014

அன்னையர் தினம்




பத்து மாதம்... பத்து மாதம்...
சொல்லிவிடலாம் சும்மா
ஆனால் சுமந்து பெற்றாளே அம்மா

கைத்தொலைபேசி கடிகாரம் கார்ச்சாவி
வெளியே போய்விட்டு வீட்டுக்குள் வந்ததும்
எடுத்து வைத்துவிடுவோம் மேசைமீது
வீணான பாரங்களை சுமப்பதற்கு
விரும்புவதில்லை நாங்கள் ஒருபோதும்

கருவிலே தாங்கி மடியிலே வளர்த்து
உதிரத்தால் உருவத்தை கொடுத்து
ஈன்றெடுப்பாள் அன்னை - அவளை
கடவுளுக்கும் மேலென்று
சொல்லித் தந்தனர் ஆன்றோர்

வலிக்குது என்று
எடுத்துவைக்கவா முடியுமா - இல்லை
உதைக்கிறதே என்று
அடிக்கத்தான் முடியுமா?
உரிய காலம் வரைக்கும்
வலிகளையும் வேதனைகளையும்
நம்மோடு தம்மில் சுமந்தவள் அல்லவா தாய்

உயிர்கொடுத்து உருக்கொடுத்து
உலகறியும் வகைகொடுத்து
பாலூட்டி சீராட்டி வளர்த்த நம் தாயை
அன்பினில் எம்மைச் செதுக்கிய எம் தாயை
இன்று எத்தனை பேர்தான் நினைக்கின்றோம்?

தன்மனைவி மகவீன்ற போது
தானும்கூட இருந்த நண்பர் ஒருவர்
வெளியே வந்து என்னிடம் சொன்னார்
"இப்பத்தான்டா தெரியுது எனக்கு
என் அம்மாவின் அருமை'' என்று

போதிமரத்தின் கீழே கவுந்து கிடந்தாலும்
ஞானம் வருவதில்லை எம்மில் பலர்க்கு
தாய்மை மட்டும் பெண்களுக்கும் - அவளை
தாங்கிப் பிடிக்கும் மட்டும் ஆண்களுக்கும் தம்
தாயின் அருமை தெரிவது குறைவு

யாரும் போனபின்னே படத்திற்கு
பூப்போட்டு என்ன பயன்
வாழும்போது அவர்களுக்கு மனநிறைவோடு
மகிழ்ச்சியைக் கொடுக்காவிடின்?

வருடத்தில் தினமொன்றை ஒதுக்கிவிட்டோம்
அன்னைக்கு வாழ்த்துச்சொல்லும் நிலைக்கு
அவள் ஊட்டிய பாலே உதிரமாய்
எங்கள் உடம்பிலே ஓடுவது உண்மையென்றால்
வணங்கிடுவோம் அவர்களை தினமே
இனி வருவதெல்லாம் அன்னையர்க்கு தினமே.


Saturday, 30 November 2013

சிரிப்பினில் எரித்தவள்







55 கிலோ எடையில் ஒரு பூ
ஆடையில் போனது வீதியில்
அந்த இடையோடு சேர்ந்து என்
உயிரும் போனது காணாமல்

திட்டான திடலான ஒழுங்கையில் போன
வண்டிலைப்போல் குலங்கியது என் இதயம்
வளைந்து ஓடிய மழை வெள்ளமென
நடந்து போகிறாள் நளினமாய்

என்னை விழுங்கிய அந்தப் பார்வையில் தான்
எத்தனை அர்த்தங்கள்
எத்தனை கண்களைக் கடந்திருக்கிறேன்
இது என்ன இப்படித் தின்கிறதே
அவளுக்குப் போட்ட பூசைக்கு
நான் தானா பலி

திரும்பிப் பார்த்தாள் தெறித்தது மின்னல்
தூக்கிப் போட்டாள் பின்னலைப் பின்னால்
வலித்திருக்குமோ முதுகு?
அவள் என்னை கடந்து போன அந்த கணத்தில்
உணர்ச்சி அற்றுப் போயிருந்தேன் பிணமாய்

நிலவு கூட அழகாய்த்தான் இருந்தது
அவள் முகத்தைப் பார்க்கும் வரை
எங்கோ அவளைப் பார்த்தது போலத்தான் இருக்கிறது
ஆனால் எந்தத் தோட்டத்தில் எந்தச் செடியில்
என்று தான் நினைவிலில்லை

சிரித்து விட்டுத்தான் போகிறாள்
என்று இருந்து விட்டேன்
பின்பு தான் புரிந்தது
என்னை எரித்து விட்டுப்
போனாள் என்று.



Wednesday, 27 November 2013

மண்ணுக்கீந்த மாவீரர்கள்





மண் ஈன்ற மறவர்களே - உயிரை
மண்ணுக்கீந்த மா வீரர்களே
விடுதலையே மூச்சாகி வேங்கையெனப் பாய்ந்தவரே
எழுதுகோலில் அடங்கிடுமா உங்களின் தியாகமே

பெற்ற அன்னைக்கும் மேலாய் தமிழ் ஈழம் உமக்கே
சுற்றமும் துறந்தே மண் மீட்டிடச் சென்றீர்
எத்துனை இடர் வந்த போதும் சோராமல்
எம்மினத்தின் இருள் நீக்கச் சுடரானீர்

வெற்றிக்கு அடிப்படை ஆயுதமே என்றால்
எப்போதோ அழிந்திருக்கும் எம்மினமே அடியோடு
உங்களின் வீரமும் உள்ளத்து வலிமையுமே
இத்தனை காலமாய் தமிழ் ஈழத்தைத் தாங்குது

எடுத்து நசுக்கி எறிந்துவிடப் பேனல்லத் தமிழன்
ஏமாந்து இனியும் அடிமையாகப் பேயனல்லத் தமிழனென்று
கொடுத்த அடியினில் காட்டினீர் தமிழன் வீரத்தை
எதிரிக்கு மட்டுமல்ல உலகிற்கே எடுத்து

நீங்கள் துயில்கின்ற இல்லங்கள் - சீர் கொண்ட
எங்கள் தமிழ் ஈழத்து ஆலயங்கள்
உங்களின் ஈகம் போகாது வீணாய் - ஓர் நாள்
ஐ நா விலும் பறக்கும் ஈழக்கொடி தானாய்

இளமைக்கால ஆசைகளெல்லாம்
எமக்காய் துறந்து சென்றீரே – உமக்காய்
விளக்குகளை ஏற்றிவைத்து வணங்குகிறோம்
வெளிச்சமாய் இருந்தெமக்கு வெற்றிகளைக் காட்டும்

ஈழ நாட்டின் எல்லைக் கோடுகள்
வரையப் படுகின்றன உங்கள் குருதியிலே
வீரத்தோடு வீழ்ந்த வித்துக்களே
விடியும் உங்களால் இனி தமிழ் ஈழத்திலே

                    (2008 மாவீரர் தினத்திற்காக எழுதி லண்டன் தமிழ் வானெலியில்                                ஒலிபரப்பானது.)