Saturday, 18 February 2017
Wednesday, 12 August 2015
கடவுளிடமே காசில்லை......
என் துயரங்கள்
சிலருக்கு வெற்றிடமாகவும்
மற்றோர்க்கு
வேறிடமாகவும்
இருந்து விட்டு போகட்டும்
எனக்குள்ளே கருவாகிப்
பின்பு தானாய்க்
கலைந்து போன
என் சில
கவிதைகளைப் போலவே
இங்கு
விதைக்கப் பட்டவையெல்லாம்
அங்கிருந்தே
கொடுக்கப் பட்டிருக்கின்றன
கொடுத்ததை எடுத்து
விதைத்தவன் தான் பாவம்
வளர்ந்தவைக்கு இருந்த
தண்ணியை ஊத்தி
தாகத்தில் அவனே
செத்துத்தான் போனான்
ஊரெல்லாம் கோயிலாம்
உல்லாசமாய் ஊர்வலமாம்
திருவிழா வந்து விட்டால்
தேரேறித்தான் தீருவானாம்
பாரெல்லாம் ஆழுவானாம்
பரந்தாமன் எனும் பேருடையானாம்
ஆனாலும் இந்த
ஊழியனுக்கு கொடுக்கத் தான்
அவனிடமும் காசில்லையாம்.
ஆக
என் துயரங்கள் எனக்கு மட்டும்
துயரங்களாக
இருந்து விட்டுப் போகட்டும்
சிலர்க்கு வெற்றிடமாயும்
மற்றோர்க்கு வேறிடமாயும்....
Sunday, 22 February 2015
விதி இவ்வளவு....
நீ
எழும்பிப் போன
எந்தவெரு காலையும்
உனக்கு சொல்லியிருக்காது
உன் விடியலுக்காய்
ஒருத்தன்
காத்திருந்தான் என்று
நீ
கடந்து சென்ற
கடைசி சாலை கூட
உனக்கு நினைவிலிருக்காது
ஆனாலும் அது சொல்லும்
அதன் கடைசியில் ஒருத்தன்
உனக்காக காத்திருந்தான் என்று
பசிக்காக
நீயும் சாப்பிட்டிருப்பாய்
ஆனால்
யார் உனக்கு சொல்லியிருப்பார்
உனக்காக ஒருத்தன்
பட்டினியாய் கிடந்தான் என்று
யார் யாரோ மீதெல்லாம்
நீ அன்பு காட்டும்போது
உன் அறிவுக்கு எட்டியதா
உன் மடிமீது கிடந்து
ஆராரோ கேட்க
ஒருத்தன் இங்கே
துடிக்கிறான் என்று
வசதிக்காய்
நீ உன் வாழ்க்கையை
அமைத்துக்கொண்டு
விதி அவ்வளவே என்றாலும்
உன்னால் வீணான வாழ்வதனை
ஒருத்தன் ஏற்றுக்கொண்டான்
விதி இவ்வளவே என்று.Wednesday, 11 February 2015
கணவனின் சப்பாத்து.....
ஆ.... கடவுளே... இன்னும் கொஞ்ச நேரம்
களிச்சு
இந்த பாளாப் போன அலாரம்
அடிக்கக்கூடாதா...
எந்த நாசமாய்ப் போனவன் இதை கண்டுபிடிச்சானோ....
இப்பத்தான்
கண்ண மூடுறன் அதுக்குள்ள டீங்...டீங் எண்டு கத்துது.
காலமை எழுந்தா அதில இருந்து
ஒரே ஓட்டம். மனுசருக்கு கொஞ்சமாவது
நிம்மதி இருக்கா?
நான் எழும்பினால் மட்டும் சரியா? பிள்ளைய
எழுப்போனும். முதல்ல கொஞ்சோனும் பிறகு
கெஞ்சோனும் கடைசியில அப்பாட பெல்ட எடுக்கவோ
எண்டு அதட்டோனும். அதக்குப் பிறகு அவன வெளிக்கிடித்திப்போட்டு
என்ர மனுசன எழுப்போனும்.
பிள்ளை
எண்டாலும் பறவாயில்லை கத்தினால் எழும்புவான்
ஆனா இந்த மனுசன் இரவில
என்ன இழவ குடிக்குதோ தெரியேல்ல
இழுத்து
இழுத்து போத்திக்கொண்டு படுக்குது.
எண்டாலும்
அதையும் எழுப்பி வேலைக்கு அனுப்பிப்
போட்டு
எங்களோடய
வந்து ஒட்டிக்கொண்டிருக்கும் அவர்ட அப்பாவுக்கும் தேத்தண்ணி
போட்டு குடுத்து சாப்பாடும் எடுத்து வச்சுட்டு
கடைசியில
நானும் அவசர அவசரமாய் வேலைக்குப்
போயிட்டு வந்து, வீட்டு வேலையையும்
பாத்திட்டு மனுசனுக்கும் நோகாமல் நடந்து பிள்ளைக்கும்
ஹோம் வெர்க் சொல்லிக் குடுத்து
இரவுக்கு சாப்பாடும் செஞ்சு எல்லாருக்கும் குடுத்துப்போட்டு....
சிவனே எண்டு படுத்தா கறகற
கீச் கறகறகீச் என்டு கேக்குது.
எழும்பி
வந்து பாத்தா என்ர மாமனார்,
அதாவது என்ர மனுசன்ட அப்பா
என்ர மனுசன்ர சப்பாத்துக்கு பொலிஷ்
போட்டுக்கொண்டிருக்காரு.
என்ன மாமா இந்த நேரத்தில
இதெல்லாம்
எண்டு எரிச்சலோட கோட்டால்
பிள்ள இதெல்லாம் நான் இப்ப தானோ
செய்யிறன் அவன் நர்சரி போற
காலத்தில இருந்து நான் தானே
அவனுக்கு இதெல்லாம் செய்யிறன் எண்டு சொல்லீட்டு போகேக்கில
வேதம் புதிதுல சத்தியராயுக்கு விழுந்த
போல எனக்கும் ஒரு அறை விழுந்திச்சு.
என்ன இருந்தாலும், அவனே வளர்தாலும், அப்பாவுக்கு
எப்பவுமே மகன், மகன் தானே.....
Thursday, 18 September 2014
ஏய் எருமை மாடு.......
அன்பே நீ எருமை மாடு
மேலே மழை பெய்தது போலே
போனால் போனால் ஆகுமா
நீ வெறுத்தால் என் காதல்
பொய்த்துப் போகுமா
உன் மேலே நான் வைத்த ஆசை - அது
நீ போன கோவிலின் மணி ஓசை
உன் செவிதனை சேராமல் போய்விடுமா
என் மனம்தனை ஆறாமல் செய்திடுமா
நானும் தான் கடவுளை தேடினேன்
என் காதல் மெய்ப்பட வேண்டினேன்
நான் என்ன நயன் தாராவையா கேட்டேன்
நாசமாய்ப் போன உன்னைத்தானே கேட்டேன்
என்னை ஏன் அவன் தண்டித்தான்
உனைச் சேராமல் செய்வித்தான்
காதலை நான் வெறுக்கவா - இல்லை
கடவுளே இல்லையென்று நான் மறுக்கவா
நான் இன்னும் நானாகவே இருக்கவா
இல்லை எதிர் காலத்திலே
எனை நீ வெறுத்ததற்காய்
உனை வருந்திடச் செய்திடவா?????
Sunday, 3 August 2014
என்னை மறந்த பொழுதும்...நான் உன்னை மறக்கவில்லையே...
காற்றிலே
மேகம் தானே
கலைந்து
தான் போவது போலே
கானலின்
நீராய் நீயும்
போனது தானோ வாழ்க்கை.....
அன்று ஏனோ அந்த அவசரம்
இன்று தானே வந்த சமரசம்
கொஞ்சம்
பொறுத்திருந்தால்
என்னை நினைத்திருந்தால்
எதற்கு
இந்த சாராம்சம்
எதனால்
இந்த போராட்டம்
நீ இழந்தவற்றில்
ஒன்றாக
நானும் இருக்கேனா
நீ பெற்றதிலே இல்லாது
நானும்
போனேனா???
நீ ஏதுமில்லை
எனக்காருமில்லை
என்றே நீயும் ஆனாயேய்
இது போதவில்லை
நீ சாகவில்லை
என்றே வீழ்த்திச் சென்றாயே..
Sunday, 30 March 2014
அன்னையர் தினம்
பத்து மாதம்... பத்து மாதம்...
சொல்லிவிடலாம் சும்மா
ஆனால் சுமந்து பெற்றாளே அம்மா
கைத்தொலைபேசி கடிகாரம் கார்ச்சாவி
வெளியே போய்விட்டு வீட்டுக்குள் வந்ததும்
எடுத்து வைத்துவிடுவோம் மேசைமீது
வீணான பாரங்களை சுமப்பதற்கு
விரும்புவதில்லை நாங்கள் ஒருபோதும்
கருவிலே தாங்கி மடியிலே வளர்த்து
உதிரத்தால் உருவத்தை கொடுத்து
ஈன்றெடுப்பாள் அன்னை - அவளை
கடவுளுக்கும் மேலென்று
சொல்லித் தந்தனர் ஆன்றோர்
வலிக்குது என்று
எடுத்துவைக்கவா முடியுமா - இல்லை
உதைக்கிறதே என்று
அடிக்கத்தான் முடியுமா?
உரிய காலம் வரைக்கும்
வலிகளையும் வேதனைகளையும்
நம்மோடு தம்மில் சுமந்தவள் அல்லவா தாய்
உயிர்கொடுத்து உருக்கொடுத்து
உலகறியும் வகைகொடுத்து
பாலூட்டி சீராட்டி வளர்த்த நம் தாயை
அன்பினில் எம்மைச் செதுக்கிய எம் தாயை
இன்று எத்தனை பேர்தான் நினைக்கின்றோம்?
தன்மனைவி மகவீன்ற போது
தானும்கூட இருந்த நண்பர் ஒருவர்
வெளியே வந்து என்னிடம் சொன்னார்
"இப்பத்தான்டா தெரியுது எனக்கு
என் அம்மாவின் அருமை'' என்று
போதிமரத்தின் கீழே கவுந்து கிடந்தாலும்
ஞானம் வருவதில்லை எம்மில் பலர்க்கு
தாய்மை மட்டும் பெண்களுக்கும் - அவளை
தாங்கிப் பிடிக்கும் மட்டும் ஆண்களுக்கும் தம்
தாயின் அருமை தெரிவது குறைவு
யாரும் போனபின்னே படத்திற்கு
பூப்போட்டு என்ன பயன்
வாழும்போது அவர்களுக்கு மனநிறைவோடு
மகிழ்ச்சியைக் கொடுக்காவிடின்?
வருடத்தில் தினமொன்றை ஒதுக்கிவிட்டோம்
அன்னைக்கு வாழ்த்துச்சொல்லும் நிலைக்கு
அவள் ஊட்டிய பாலே உதிரமாய்
எங்கள் உடம்பிலே ஓடுவது உண்மையென்றால்
வணங்கிடுவோம் அவர்களை தினமே
இனி வருவதெல்லாம் அன்னையர்க்கு தினமே.
Subscribe to:
Posts (Atom)








