Tuesday, 22 November 2011
மச்சாளை விடு தூதாய்!!!!
ஹாய் மச்சாள் ஹாய் மச்சாள்
எப்படி சுகம்
வீட்டிலயும் அம்மா அப்பா
எப்படி சுகம்
அக்கா எங்கே ரெண்டு நாளாய் காணலியே
வெள்ளிக் கிழமை கோயிலுக்கும் வரவில்லையே
அவளை நான் காணத நாட்களிலே
அரைவாசியாய் தேய்ந்து போறேன் நிலாப் போலே
எங்கே அவள் என்னவள்
நீ சொல்லிப் போவாயா......
(ஹாய் மச்சாள் ஹாய் மச்சாள்.....
அக்காவிடம் சொல்லிவை
அத்தான் ரொம்ப நல்லம் என்று – அவள்
அடிக்கடி என்னை முறைக்கிறாள்
அது வேண்டாம் என்று
கடிதம் கடிதமாய் எழுதினேன் - தூங்காமலே
அதை கிழித்துப்போட்டு எறிகிறாள் படிக்காமலே
நாயென்று ஒருநாள் என்னைப் பேசிவிட்டாள்
அது கூடப் பறவாயில்லை பொறுத்துக்கொண்டேன்
அப்பாவிடம் சொல்வேன் என்று மிரட்டிவிட்டாள்
அது கேட்ட நாள் முதலாய் தூக்கமில்லை
உனக்குமா என்னைப் பார்க்க பாவமாயில்லை
ஹெல்ப் பண்ணு உன்னை விட்டால் யாருமேயில்லை
(ஹாய் மச்சாள் ஹாய் மச்சாள்......
அவளேட ஸ்கூல்பாக்கின் நுனியில் ஒன்றை
நோகாமல் பிடுங்கி நான் வைத்திருக்கேன்
மை முடிந்து அவளெறிந்த பேனா ஒன்றை
ஆசையோடு எடுத்து நான் வைத்திருக்கேன்
அவளைத் தவிர வேறொருத்தியை நினைத்ததில்லை
அவள் என்னவென்றால் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை
கவிதை எல்லாம் அவளைப் பற்றி எழுதித் தந்தேன்
கண்டபடி எனைப்பிடித்துப் பேசிவிட்டாள்
சீதனமாய் ஒரு சதமும் வாங்க மாட்டேன்
கல்யாணச் செலவைக்கூட நானே தான் பார்த்துக்கொள்வேன்
அவள் இல்லாமல் நானினிமேல் வாழமாட்டேன்
எங்களை சேர்த்துவை உன்னை நான் மறக்கமாட்டேன்
(ஹாய் மச்சாள் ஹாய் மச்சாள்......
ஹா...ஹா...ஹா,
எப்புடீ?
Sunday, 13 November 2011
இனிக்கும் வாழ்க்கை உனக்கே உனக்கே
முயற்சி உடை மனிதா
முயன்று தடையை உடை
எழிச்சி நடை நடந்தே
உலகை புகழ்ச்சி பாடவை
வாழ்வினை வென்றவரே வாழ்ந்தார் – வரலாற்றில்
மாண்டபின்பும் அவர் வாழ்வார்
வெற்றியினை முயன்று எட்டிவிடு – வரலாறே
போற்றும் உன்னை மண்டியிட்டு
திட்டமிட்டுத் தொடங்க வேண்டும் - வெற்றி
கிட்டும்வரை உழைக்க வேண்டும்
முயன்றால் எதிலும் தோல்வியில்லை - முதலில்
தோற்பினும் பிறகு வெற்றி தூரமில்லை
சாதகமான சந்தர்ப்பங்கள் எதுவும்
வாய்ப்பதில்லை தானாய் முன்னேற
வாய்ப்பதனை உனக்கு வாய்ப்பாய்
ஆக்கினால் எதுவும் சாத்தியமே
இலகுவில் கிடைப்பது நிஐமல்ல – யாரையும்
ஏமாற்றிப் பெறுவது நிரந்தரமல்ல
நேர்மைவழி நின்று ஊக்கமாய் முயன்றால்
இனிக்கும் வாழ்க்கை உனக்கே உனக்கே
Tuesday, 1 November 2011
அந்த இரவு தந்த பயம்
பாதி இருளில் ஆரண்யம்
மதிமயங்க வைத்தததன் லாவண்யம்
கத்தும் குருவிகளில் எனை மறந்து
நறுமலர்கள் தனை நுகர்ந்து
நெடுந்தூரம் சென்றேன் வழி மறந்து
தூரத்து சங்கீதமென் வேகத்தைக் கூட்ட
விர்றென்று தேடி இடம் மாறி - நான்
விரைந்த இடம் ஒரு காடா?
இல்லை இல்லை அதுவொரு சுடுகாடு
தேகச்சூடு தணிந்து குளிர் வீசியது
நரம்புகள் விறைத்து முடிகள் சிலிர்த்தன
சுட்ட பிணங்களின் அணையாத் தணல்களின்
நெருப்பும் புகையும் கண்களைத் துருத்தின
முழுக்க எரிந்து முடியாத ஒன்றை
நாயோ நரியோ ஏதோ ஒன்று
இழுத்துக் கொண்டு எனைக்கண்டு ஓடியது
விறைத்து நெஞ்சு துடிக்கத் திரும்பி ஓடினேன்
எடுத்த தாகம் தணிக்கத் தண்ணீர்
கிடைக்க இடையில் கிணறு ஒன்று
கிட்டினேன் எட்டிப் பார்த்தேன்
மண்டியிட்டு உருவமொன்று அழுதுகொண்டிருந்தது
ஓடிப்போய்த் துலைவோம் என்றில்லாமல் அதன்
தோளைத் தொட்டு மெல்லத் திருப்பினேன்
ஓலத்தை நிறுத்தி மெல்லமுகம் நிமிர்த்தி முறைத்தது
ஆவென்று கத்தியும் வாய் எனக்குத் திறக்கவில்லை
கோரப்பற்களில் சொட்டும்குருதி துளித் துளியாய்
கொடும்நெருப்பில் எரியும் பந்து விழிகளாய்
உரிந்த தோல்களின் ஊடே ஊனும் ஒழுக
புழுக்களும் பூச்சிகளும் ஊர்ந்தன உடம்பில்
இருந்த மாத்திரத்தில் அந்தரத்தில் எழுந்து
விரித்த வாயோடு வந்தது என்னை விழுங்க
திரும்பி எடுத்த ஓட்டம் திரும்பத்திரும்ப ஓடியும்
அடுத்த அடியை எடுத்துவைக்க முடியல
கிட்டவந்த அதற்கு எட்டியுதைக்கக் கால்நீட்டி
உறுண்டு விழுந்தேன் கட்டிலின் மீதிருந்து
எழுந்து போய்ப் படுத்துக்கொண்டேன்
மீண்டும் போர்வையைப் போர்த்திக்கொண்டு
Sunday, 30 October 2011
காதலாகி கசிந்து......
"என் வாழ்க்கையில் இதுவரைக்கும் நான் தோல்விகளையும் வேதனைகளையும் மட்டுமே சந்தித்து வந்திருக்கிறேன். எனக்கு நீ கிடைத்ததை மிகப்பெரிய ஆறுதலாக நினைக்கிறேன். இனிமேல் நீ தான் என் வாழ்க்கையில் எல்லாமே. நீ இல்லாத என்னுடைய எதிர்காலத்தை எண்ணிப்பார்க்கவே பயமாக இருக்கிறது. இப்போது நான் சந்தோஷமாக இருக்கிறேன். உன்னால் கிடைக்கும் இந்த சந்தோஷம் எப்போதுமே நிரந்தரமாக இருக்க வேண்டும்."
- அரவிந்தன்
"நான் உங்களுக்காகப் பிறந்தவள். உங்களோடு வாழ்வதில்தான்
என்னுடைய வாழ்கையின் அர்த்தமே இருக்கிறது. இனியும் நீங்கள் கவலைப்பட்டால் நான் வாழ்வதில் பயனில்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது நீங்க மட்டும் தான். உங்களின் நிழலாக எப்போதுமே நான் இருப்பேன். இது சத்தியம்."
- தர்ஷினி
"என் வாழ்க்கையில் இதுவரைக்கும் நான் தோல்விகளையும் வேதனைகளையும் மட்டுமே சந்தித்து வந்திருக்கிறேன். எனக்கு நீ கிடைத்ததை மிகப்பெரிய ஆறுதலாக நினைக்கிறேன்.
இனிமேல் நீ தான் என் வாழ்க்கையில் எல்லாமே. நீ இல்லாத என்னுடைய எதிர்காலத்தை எண்ணிப்பார்க்கவே பயமாக இருக்கிறது. இப்போது நான் சந்தோஷமாக இருக்கிறேன். உன்னால் கிடைக்கும் இந்த சந்தோஷம் எப்போதுமே நிரந்தரமாக இருக்க வேண்டும். இதைத்தான் நான் தர்ஷினியிடமும் சொன்னேன். ஆனால் அவள் என்னை ஏமாற்றி விட்டாள். நீயும் என்னை ஏமாற்றி விடாதே."
- அரவிந்தன்
"என்னாலும் நீங்க இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்து பார்க்கக்கூட முடியாமல் இருக்கிறது. நானும் நீங்களும் சேர்ந்து வாழ வேண்டும் என்பது இறைவன் இட்ட நியதி. உங்களை எனக்கு தந்த கடவுளுக்குத்தான் நான் நன்றி சொல்லனும். எங்களை இனி எந்த சத்தியாலும் பிரிக்க முடியாது. அரவிந்தன், நான் வாழ்ந்தால் அது உங்களேடு தான். இல்லாவிட்டால் சாவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை."
- மாதவி
"என் வாழ்க்கையில் இதுவரைக்கும் நான் தோல்விகளையும் வேதனைகளையும் மட்டுமே சந்தித்து வந்திருக்கிறேன். எனக்கு நீ கிடைத்ததை மிகப்பெரிய ஆறுதலாக நினைக்கிறேன். இனிமேல் நீ தான் என் வாழ்க்கையில் எல்லாமே. நீ இல்லாத என்னுடைய எதிர்காலத்தை எண்ணிப்பார்க்கவே பயமாக இருக்கிறது. இப்போது நான் சந்தோஷமாக இருக்கிறேன். உன்னால் கிடைக்கும் இந்த சந்தோஷம் எப்போதுமே நிரந்தரமாக இருக்க வேண்டும். இதைத்தான் நான் தர்ஷினியிடமும் சொன்னேன் மாதவியிடமும் சொன்னேன். ஆனால் அவர்களெல்லாம் என்னை ஏமாற்றி விட்டார்கள். நீயும் என்னை ஏமாற்றினால் என் நிலமை என்னவாகும் என்று எனக்கே தெரியாது.'
- அரவிந்தன்
"அவர்கள் கொடுத்து வச்சது அவ்வளவு தான். அரவிந், உம்மை பற்றி நல்லாப் புரிஞ்சு கொண்ட பிறகு தான் நான் உம்மை லவ் பண்ண தொடங்கினான். உம்முடைய நல்ல மனசு எனக்கு பிடிச்சிருக்கு. எல்லோருக்குமே கடந்த காலம் கறைபடிஞ்சதாய் தான் இருக்கும்.
இனியும் நீர் உமது இறந்த காலத்தைப் பற்றி கவலைப் படக்கூடாது. நீர் எனக்காக நான் உமக்காக."
- ரஞ்சனி
"என் வாழ்க்கையில் இதுவரைக்கும் நான் தோல்விகளையும் வேதனைகளையும் மட்டுமே சந்தித்து வந்திருக்கிறேன். எனக்கு நீ கிடைத்ததை மிகப்பெரிய ஆறுதலாக நினைக்கிறேன். இனிமேல் நீ தான் என் வாழ்க்கையில் எல்லாமே. நீ இல்லாத என்னுடைய எதிர்காலத்தை எண்ணிப்பார்க்கவே பயமாக இருக்கிறது. இப்போது நான் சந்தோஷமாக இருக்கிறேன். உன்னால் கிடைக்கும் இந்த சந்தோஷம் எப்போதுமே நிரந்தரமாக இருக்க வேண்டும். இதைத்தான் நான் தர்ஷினியிடமும் சொன்னேன் மாதவியிடமும் சொன்னேன் ரஞ்சனியிடமும் சொன்னேன். ஆனால் அவர்களெல்லாம் என்னை ஏமாற்றி விட்டார்கள். நீயும் என்னை ஏமாற்றிவிடாதே."
- அரவிந்தன்
"நல்ல பெடியன். ஒழுங்காத் தான் இருந்தவன். இப்ப கொஞ்ச நாளாய்தான் இப்படி. யாரைப் பார்த்தாலும் இதையே செல்லிக் கொண்டு திரியிறான். ம்... எல்லாம் அவரவர் தலையெழுத்து."
- ஒரு வழிப்போக்கர்
Tuesday, 25 October 2011
பேசியது நிலவு....
வாடா வா
காத்திருந்தேன் கன காலமாய்
மாட்டிக் கொண்டாய் இன்று
மிக வசமாய்
வளர்வதும் தேய்வதும் நானல்ல
அறியாயோ என் வரலாறு
பூமி அன்னை சுற்றுகிறாள்
அதனால் தான் இந்த கோளாறு
பள்ளங்களும் நிறைய திட்டுக்களும் என்னில்
அதற்காக
மாதர் முகத்திற்கு ஈடுநான் இல்லையென
திட்டுவாயோ என்னை?
கோடிகளை கொட்டி
வல்லரசுகளும் என்னை ஆராய
கேடுகெட்ட உனக்காய்
நான் போகவோ தூதாக
பள்ளி செல்லும் வயதிலே
நிலா நிலா வாவென்று அழைத்தாய்
பிள்ளைப் பருவமது வேறென்ன சொல்ல
இன்று
வளர்ந்து நீ அப்படி என்ன கிழித்தாய்
எவளுக்கோ நான் போய்
உன்னிலையைத் தூது சொல்ல
பரீட்சையிலே என்னைப்பற்றி
கட்டுரை வரையக் கேட்டபோது
அடுத்தவன் மேசையை
எட்டி எட்டி பார்த்தாய்
யார் தந்த தைரியத்தில் இன்று
கண்டவளின் முகத்திற்கும்
என்னை ஒப்பிட்டு எழுதினாய்
நீ அடம் பிடிக்கப் பிடிக்க
என்னைக் காட்டிக் காட்டி
உன்னை ஊட்டி வளர்த்தவள்
உன் அன்னை
உனக்கு என்னவென்றால்
என்னைப் பார்க்கப் பார்க்க
உன் காதலி தான்
நினைவுக்கு வாறாளோ?
என் வழியில் நான் சுற்றுகிறேன்
என்னைத் தொந்தரவு செய்யாதே
நாசமாய்ப் போவதென்றால்
நீ மட்டும் போய்விடு
பேசாமல் என்னை
நிம்மதியாய் விட்டு விடு.
Friday, 21 October 2011
பிடித்த கடவுள் ( நகைச்சுவை கவிதை)
பிடித்த கடவுள் - நீ
பித்துப் பிடித்த கடவுள்
எல்லாம் அறிந்தவன் நீ ஆண்டவன் நீ
கடவுள் நீ முற்றும் கடந்தவன் நீயென்று
கல்லென்றும் பாராது நாடிவந்து – உன்
முன்விழுந்து வேண்டிநின்றேன்
காப்பாய் எனை நீ என்று
வைத்தாயே தொடர்ந்து எனக்கு
ஆப்பு ஆப்பாய்
சொல்லெணாத் துன்பங்கள் வந்து
சூழ்ந்து என்னை ஆர்ப்பரிப்பினும்
எல்லாம் வல்லவன் என்னோடு இருப்பான் என
வைத்தேனே உன்னில் நம்பிக்கையை
விரித்துவிட்டாயே நீயோ உன் கையை
வெற்று வேதங்களைக் கற்று கடைசிவரை
பற்றினேன் கடவுளென்று உன்னை
கை கால்களில் கட்டோடு – வைத்தியரின்
கட்டிலே கதியென்று கிடக்கின்றேன் இப்போது
நெற்றியிலே இட்டநீறு கொட்டுமுன்னே அவர்கள்
சுற்றிவந்து சூழ்ந்து நின்று அடிக்கையிலே
எட்டி நின்று நீயும் வேடிக்கை பார்த்தனையோ
நீயே பரம்பொருள் மெய்யே சிவமென்று
வாயே ஓயாமல் உரைத்த என்னை
வானம் அள்ளித் தெளித்த மழையினிலே
துள்ளி முளைத்த காளானெல்லாம்
எள்ளிநகை ஆடும் வகை செய்தனையே
அன்பே சிவமென்று நீயுரைத்த
மறைதனை நீயே மறந்தனையோ
அதை நானும் நம்பித்தானே அடுத்தவீட்டுக்
கன்னியின் மேல் காட்டினேன் அன்பை
இப்படி அவள் குடும்பமே வந்து
மொத்திவிட்டுப் போனதே என்னை
உட்காயங்கள் உயிர்வரை வலிக்க
விட்டாயே என்னைத் தனிமையிலே புலம்ப
எனக்குப் பிடித்த கடவுளா நீ
பித்துப் பிடித்த கடவுளா நீ
Tuesday, 18 October 2011
பேதை மதியும் மூடமதியும்
பல கட்டுக்கதைகளை கேட்டு கேட்டு
கெட்டது புத்தி காலங் காலமாய் - அதிலுமிந்த
நிலவு படுது கதைகளிலே படாத பாடு
வேடம் பூண்டு அமுதை உண்ட
ராகு கேதுவை காட்டிக் கொடுத்ததால்
விழுங்குது அவைகள் நிலவை
பாம்பாக வந்தென்று
சந்திர கிரகணம் வந்தபோது
காரணம் அன்று சொல்லப்பட்டது
ஆடிய பிள்ளையாரை
வேடிக்கை பார்த்து நகைத்ததால்
தேயுது நிலவு சாபங்கொண்டு
ஓடிய நிலவு பரமனை வேண்ட
பிறையாய் எடுத்தார்
சிரசில் வைத்தார் என்று
படித்தேன் பாடத்தில் - மனம்
பரிதாபப் பட்டது
நிலவுக்காய் அன்று
மூன்றாம் பிறையே சிவனின்
தலையிலே இருப்பது என எண்ணி
தேடித் தேடிப் பார்த்தேன் அதனை
அடுத்தவர் பிறையை வணங்கையிலே
அது இருக்கும் முடிக்குக் கீழ்த்தானே
ஈசன் முகமது இருக்குதென நம்பி
சற்று கீழாக உற்று உற்று நோக்கினேன்
அறியாமல் என்றேனும்
நாலாம்பிறை பார்த்து விட்டால்
நாய்படாத பாட்டை
நானே தனியாய்ப் படுவதோ என்று
கூடவந்த நண்பர்களையும்
பார்க்கவைத்து திருப்தி கொண்டதுண்டு
பசியாய் இருக்கும் சமயங்களில்
பார்க்கும் நிலவில் அழகாய்
பாட்டி வடை சுட்டால்
நாக்கில் ஊறும் எச்சில்
பாட்டியும் வடையும் அல்லவது
பள்ளமும் மேடுமே என்று
அறிவதற்கே ஆயின பலகாலம்
விஞ்ஞானிகளாயும் ஆராச்சியாளர்களாயும்
பிறகெங்கே ஆவது நாங்கள்
அட்டமி நவமி தொட்டது நாசமென்றதால்
தள்ளிப் போயின பல காரியங்கள்
நல்ல நாள் பார்த்துப் பார்த்தே
அமெரிக்கன் காரன் அங்கே தன் கொடி நாட்டி
நிலவினை தான் உரிமை கொண்டாட
நாமோ அம்புலிக்கு மாமா முறை சொல்லி
உறவு கொண்டாடினோம்
அவனவன் விண்வெளிக்கு
ஓடம் விட்டுத் தேடிப்போய்
ஆராச்சி செய்து வர
நாங்கள்
நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடி வாவென
நோகாமல் கூப்பிட்டு நிலா தானாக வருமென
இருந்து விட்டோம் சிந்திக்காமல்
உள்ளதை உள்ளபடியே
உண்மையினை உண்மையாகவே
சின்ன வயதிலிருந்தே விதைத்திருந்தால்
வீணான கற்பனைகள் சேராது இருந்திருக்கும்
தெளிவான சிந்தனைகள் சிறப்பினை சேர்த்திருக்கும்
Subscribe to:
Posts (Atom)








