Tuesday 25 October 2011

பேசியது நிலவு....



வாடா வா
காத்திருந்தேன் கன காலமாய்
மாட்டிக் கொண்டாய் இன்று
மிக வசமாய்

வளர்வதும் தேய்வதும் நானல்ல
அறியாயோ என் வரலாறு
பூமி அன்னை சுற்றுகிறாள்
அதனால் தான் இந்த கோளாறு




பள்ளங்களும் நிறைய திட்டுக்களும் என்னில்
அதற்காக
மாதர் முகத்திற்கு ஈடுநான் இல்லையென
திட்டுவாயோ என்னை?

கோடிகளை கொட்டி
வல்லரசுகளும் என்னை ஆராய
கேடுகெட்ட உனக்காய்
நான் போகவோ தூதாக

பள்ளி செல்லும் வயதிலே
நிலா நிலா வாவென்று அழைத்தாய்
பிள்ளைப் பருவமது வேறென்ன சொல்ல
இன்று
வளர்ந்து நீ அப்படி என்ன கிழித்தாய்
எவளுக்கோ நான் போய்
உன்னிலையைத் தூது சொல்ல

பரீட்சையிலே என்னைப்பற்றி
கட்டுரை வரையக் கேட்டபோது
அடுத்தவன் மேசையை
எட்டி எட்டி பார்த்தாய்
யார் தந்த தைரியத்தில் இன்று
கண்டவளின் முகத்திற்கும்
என்னை ஒப்பிட்டு எழுதினாய்





நீ அடம் பிடிக்கப் பிடிக்க
என்னைக் காட்டிக் காட்டி
உன்னை ஊட்டி வளர்த்தவள்
உன் அன்னை
உனக்கு என்னவென்றால்
என்னைப் பார்க்கப் பார்க்க
உன் காதலி தான்
நினைவுக்கு வாறாளோ?

என் வழியில் நான் சுற்றுகிறேன்
என்னைத் தொந்தரவு செய்யாதே
நாசமாய்ப் போவதென்றால்
நீ மட்டும் போய்விடு
பேசாமல் என்னை
நிம்மதியாய் விட்டு விடு.

No comments:

Post a Comment