Wednesday 30 October 2013

ஒரே ஒரு முறை





கறுக்காத குண்டுமணி குப்பையிலே கிடந்ததுபோல்
மறக்காத மங்காத நினைவுகளும் மூளையிலே கிடக்குது

ஆருக்கோ சொந்தமான தேசத்தில் 
அகதிவாழ்க்கையிலும் ஆடம்பரம் காட்டி
காருக்கும் காசுக்குமாய் கனகாலம் திரிஞ்சாச்சு

களைத்துப்போன நேரத்திலே இழுத்துவிட்ட மூச்சோடு
ஒட்டிக்கொண்டு வந்தது ஓரமாய் 
அந்த மண்ணின் வாசம்



முன்வளவுத் தென்னைகளும் பின்வீட்டு மாமரமும்
நான் வளர்த்துப் பின் கிணற்றில் விட்டுவந்த மீன்களும்
மீண்டும் மீண்டும் என்கனவிலே வந்துவிட்டுப் போகின்றன

ஒழுங்கைப்புழுதி உடம்பெல்லாம் ஒட்ட 
உறுண்டு விளையாடிய பொழுதுகள் எத்தனை
பூவரசந்தடி முறித்துக்கொடுத்து செய்த குழப்படிக்காய்
அம்மாவிடம் வாங்கிய அடிகள்தான் எத்தனை

முற்றத்துச் செம்பருத்தியும் கோடியிலே நான் நட்ட
செவ்விளநீர்க் கன்றும் இருக்குமோ இன்னும்
கிணற்றடியில் குழிதோண்டிப் புதைத்துவிட்டு வந்த
அந்த ஒரு ரூபாய்க் காசுக்கும் என்ன நடந்திருக்குமோ



வெய்யிலிலே மண் சுட்டாலும்
வெறுங்காலோடங்கே நடக்கவேண்டும் 
பிரேக் இல்லாச் சைக்கிளிலே 
வைரவர் கோயிலடி வீதியெல்லாம் சுற்றவேண்டும்

பக்கத்துவீட்டு நாய் எப்படியும் செத்திருக்கும் - அதனாலே
இரவிலே தனிமையிலே திரியலாம் இப்போது
குஞ்சுமிஸ் இன்னமும் இருந்தால் 
கொஞ்சம்  போய்ப் பார்க்கவேண்டும் அவரையும்
எப்படியெல்லாம் வளர்ந்து விட்டேன்
என்பதனைக் காட்டவேண்டும் அவரிடமும்
வேலாயுதம் மாஸ்டருக்கும் 
போய் வணக்கம் சொல்லவேண்டும்

இப்படி எத்தனையோ ஆசையுண்டு என்னோடு
என்றேனும் ஓர் நாளில்
போகவேண்டும் சொந்த ஊருக்கு
காணவேண்டும் கண்குளிர - நான்
வாழ்ந்த இடத்தையும் வளர்ந்த வீட்டையும்
ஒரே ஒரு முறையேனும்.






3 comments:

Anonymous said...

வணக்கம்
கவிதையின் வரிகள் அருமை வாழ்த்துக்கள்

இனியதீபாவளி வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

மகேந்திரன் said...

உங்களின் ஏக்கம்
எங்களையும் தாக்கிவிட்டது...
உணர்சிகள் பலகொண்ட
உன்னதக் கவிதை...

sathees said...

நன்றி நண்பர்களே.
உங்களுக்கும் எனது தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.

Post a Comment